தமிழகம்: சாத்தூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் சரண்

  • 13 அக்டோபர் 2016

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடும் பேருந்தில் நேற்று ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சாத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தில் பயணம் செய்த கருப்பசாமி என்பவர், அவர் அருகே அமர்ந்து பயணம் செய்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

கடந்த ஜூலை 2 ஆம் தேதியன்று அப்துல்லா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கருப்பசாமியின் சகோதரர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் மதுரை 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்தக் கொலை தொடர்பாக முகமது ரஃபீக் என்பவர் சரணடைந்துள்ளார். இவரை 17ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதற்குப் பிறகு சாத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி கூறியிருக்கிறார்.

இந்தக் கொலை தொடர்பாக மேலும் 9 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வைத்து நடத்தப்படும் குற்றங்கள் மிகக் குறைவு என்பதால் இந்த சம்பவம் புதன்கிழமையன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்