சென்னையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி மாணவிகள் 3 பேர் பலி

சென்னையில் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் மூன்று கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிகரிக்கும் விபத்துக்கள்

சென்னை உள்ள கிண்டி பகுதியில் இன்று மதியம் தண்ணீர் லாரி ஒன்று திடீரென தறிகெட்டு ஓடி சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியதோடு, சாலையோரமாக சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவிகளின் மீது மோதியது.

இதில் மூன்று கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கல்லூரி மாணவிகள், அங்குள்ள செல்லம்மாள் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, அந்த தண்ணீர் லாரி அங்கிருந்த மெட்ரோ ரயில் தூணின் மீது மோதி நின்றது.

தப்பி ஓடிய லாரியின் ஓட்டுனர் ராஜேந்திரன் கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தையடுத்து, அந்தப் பகுதியில் போதுமான சாலைப் பாதுகாப்பு வசதிகளைச் செய்துதர வேண்டுமென அக்கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியைகளும் மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.