முதல்வர் உடல் நலம்: வதந்தி குறித்த கைதுகளில் தி.மு.க.வினர் இலக்கு என குற்றச்சாட்டு

  • 16 அக்டோபர் 2016

முகநூல் மற்றும் பிற சமூக வலைத்தலங்களில் உள்ள தி.மு.க.வினருக்கு எதிராக சென்னை மாநகர காவல்துறையினர் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க.வின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அ.தி.மு.க.வின் தொழில் நுட்பப் பிரிவில் இருப்பவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில்தான் தி.மு.க.வினருக்கு எதிரான நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறையினர் எடுத்து வருவதாக கூறி கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பியதாக இதுவரை 7 பேரை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இணையக் குற்றங்கள் தடுப்பு காவல் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் இதே விவகாரம் தொடர்பாக 52 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த அவசர நடவடிக்கைகள் அனைத்தும் அ.தி.மு.க.வின் அரசியல் ஆதாயத்திற்கானது என குறை கூறியுள்ள மு.க.ஸ்டாலின், "முதல்வரின் உடல் நலம் குறித்து தி.மு.க.வினர்தான் வதந்தி பரப்புகிறார்கள்" என்கிற தோற்றத்தை உருவாக்க நினைக்கும் அ.தி.மு.க.வின் முயற்சிக்கு, சென்னை மாநகரக் காவல்துறை துணை போகும் விதத்தில் செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை நடைபெற்றுள்ள கைதுகளில் கோவை வங்கியில் இரு ஊழியர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை மட்டுமே புகாராக எடுத்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கைதான அந்த இரு வங்கி ஊழியர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 505 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த பிரிவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் "வதந்தியோ அல்லது தகவலோ பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்பது முக்கியமான நிபந்தனை என மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் "வெறும் உரையாடல்" செய்து கொண்டிருந்தார்கள் என அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களை கைது செய்துள்ளது தவறானது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கைது கொடுமையானது மட்டுமல்ல, கொடூரமான மனித உரிமை மீறல் ஆகும் என்றும் மு.க.ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.