இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா? - பாமக சந்தேகம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல்கள் நியாயமாக நடக்குமா என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

Image caption பாமக நிறுவனர் ராமதாஸ்

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தை வெள்ளமாகப் பாயவிட்டதால் தேர்தல் ரத்துசெய்யப்பட்ட நிலையில், தற்போது நிலைமை சரியாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் எப்படி முடிவுக்கு வந்தது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தத் தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டுமென்றால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், இரு தொகுதிகளிலும் 10 வாக்குச்சாவடிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி மத்திய துணை ராணுவப் படையையும் 26-ஆம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த மே 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நிறுத்தப்பட்டன. பெருமளவில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகளின் காரணமாகவே இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில், அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பெரும் தொகையான பணம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து இந்த இரு தொகுதிகளுக்குமான தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திரும்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம். சீனிவேல் வெற்றிபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தன்றே அவர் உயிரிழந்தார். இதனால் அந்தத் தொகுதியும் காலியாக இருந்தது.

இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல்கள் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அதேபோல, புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்புத் தொகுதியிலும் நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்