தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கும்: உயர் நீதிமன்றம்

  • 18 அக்டோபர் 2016

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது;மேலும் தி.மு.கவும் மாநிலத் தேர்தல் ஆணையமும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ஆம் தேதி நடப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறைப்படி கடைப்பிடிக்கப்படவில்லையெனக் கூறி தி.மு.கவின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடத்தத் தடை விதித்தது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.

அக்டோபர் 24ஆம் தேதியோடு, தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் காலம் முடிவடைவதால், அதற்குப் பிறகு தனி அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி அமைப்புகளை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது; அந்த வழக்கு அக்டோபர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி வழக்கு இன்றைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.கவும் மாநிலத் தேர்தல் ஆணையமும் தங்கள் தரப்பு வாதங்களை நான்கு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக தாக்கல்செய்யும்படி கூறிய நீதிமன்றம் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.