தமிழ்நாட்டில் தீபாவளியை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நீண்ட தூரம் செல்லும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடைவிதித்துள்ளது. கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

தமிழ்நாட்டில் பண்டிகைகளை ஒட்டி தனியார் பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தானாக முன்வந்து ஒரு வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரித்து வந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதனால், அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை பயணிகளின் போக்குவரத்து அதிகம் இருக்கும் சூழலில், கடந்த ஆண்டு ஆம்னி பேருந்து கட்டணம் என்ன இருந்ததோ, அதே அளவு கட்டணத்தையே இந்த ஆணடும் வசூலிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் தடுப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டணப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி மதுரைக்கு குறைந்தபட்சமாக 880 ரூபாயும் அதிகபட்சமாக 1270 ரூபாயும் வசூலிக்கப்போவதாக அறிவித்திருந்தனர். நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு அதிகபட்சமாக 1650 ரூபாய் வரை கட்டணங்களை நிர்ணயித்திருந்தனர்.

ஆனால், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் 27 முதல் 31 வரை சென்னையில் இருந்து மதுரைக்கு 800 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்பழகன், தங்களது சிரமத்தைச் சொல்லி நீதிமன்றத்திடம் முறையிடப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் டீசலின் விலை உயர்ந்திருப்பது, சுங்கக் கட்டணங்கள் உயர்ந்திருப்பது ஆகிய காரணங்களை முன்வைத்தே தாங்கள் கட்டணங்களை உயர்த்துவதாக அவர் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, பிற மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யாதது ஏன் எனவும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த மாநில அரசு, பிற மாநிலங்களில் இருப்பதைப் போல தாங்களே கட்டணத்தை நிர்ணயிக்க முடியும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவைத் தாங்கள் வரவேற்பதாகக் கூறுகிறார் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அன்பழகன்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமா் 2,400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் சுமார் 1,400 பேருந்துகள் தமிழகத்திலும் 800 பேருந்துகள் புதுச்சேரியிலும் 200 பேருந்துகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பதிவுசெய்யப்பட்டவை.

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் நீண்டதூரத்திற்கு இயக்குவதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் ஏதும் கிடையாது. ஆகவே இந்தப் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளாகப் பதிவுசெய்யப்பட்டே இயக்கப்பட்டுவருகின்றன.

இதன் காரணமாக, இந்தப் பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்