முதலமைச்சரை மருத்துவமனையில் பார்த்தார் ஆளுநர்: உடல்நலனில் முன்னேற்றம் இருப்பதாக அறிக்கை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவை இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் பார்த்ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

முதல்வரின் உடல்நலம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், அவர் தகவல்களைப் பரிமாறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சனிக்கிழமை, மருத்துவமனைக்குச் சென்றார்.

இதற்குப் பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் தேறிவருவது குறித்து மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: ஆளுநர் மாளிகை

சனிக்கிழமையன்று காலை 11.20 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்தார்.

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் குறித்தும் ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.

முதலமைச்சர் சிகிச்சை பெறும் வார்டுக்கு ஆளுநர் சென்று பார்த்ததாகவும், முதல்வரின் உடல்நலம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டிருப்பதாகவும், தகவல்களைப் பரிமாறுவதாகவும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனைக்கு ஆளுநர் வந்ததையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.

இதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று மாலையில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் முதல்வரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். ஆனால், அப்போது அவர் சிகிச்சை பெறும் வார்டுக்குச் சென்று முதலமைச்சரைப் பார்த்ததாகத் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்