திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் மக்கள் நல கூட்டணியில் குழப்பம்?

காவிரி பிரச்சனையில், திமுக நாளை (செவ்வாய்க்கிழமை) கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நல கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீடிக்கின்றது.

Image caption மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் ?

மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க கூடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், காவிரி விவகாரம் என்பது பொது பிரச்சனை என்பதால், மக்கள் நல கூட்டணியின் தலைவர்களும் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், இது குறித்து மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ உள்ளிட்ட தலைவர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே, தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த முடியும் என்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ, காவிரி பிரச்சனையை அரசியலாக்க திமுக முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதியும், திமுகவின் முயற்சிகள் அரசியல் நாடகம் என கூறி விமர்சனம் செய்தார்.

திமுக தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

அதே சமயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டம் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கோரினார்.

இதற்கிடையே காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று உறுதி செய்தார்.