``அரசியல் ஆதாயம்``  இருப்பதால் கலந்து கொள்ளவில்லை - ஜி.ராமகிருஷ்ணன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

``அரசியல் ஆதாயம் தேடவே அனைத்துக் கட்சிக் கூட்டம்``- சி.பி.எம்

காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திமுக கூட்டியதில் ``அரசியல் ஆதாய`` நோக்கம் இருப்பதால் அதில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

காவிரி நதி நீர்ப்பிரச்சனையில் தமிழக கட்சிகளின் மத்தியில் பொதுக் கருத்தை எட்ட, தமிழக அரசு ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்தன.

ஆனால் இத்தகைய ஒரு கூட்டத்த்தை தமிழக அரசு கூட்டாத நிலையில்,எதிர்க்கட்சியான, திமுக இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இன்று சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தை மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலைச் சி்றுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

கூட்டணியின் நிலைப்பாட்டைப் பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கிய , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் , இந்தக் கூட்டம் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றார்.

ஆனால் திமுக , தமிழகத்தில் மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்த்தைக் கூட்டியிருப்பது ``அரசியல் ஆதாயம்`` பெற எடுக்கும் முயற்சி என்பதால் அந்த கூட்டத்தை தாங்கள் புறக்கணிக்க வேண்டியிருந்தது என்றார்.

மாநில அரசு செய்தால் மட்டும், அதில் ஆளுங்கட்சிக்கு அரசியல் ஆதாயம் இருக்காதா என்று கேட்டதற்கு அதைச் செய்யவேண்டியது அரசின் கடமை என்ற ரீதியில் அதைப் பார்க்கவேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.

ஒரு சில வாரங்களுக்கு முன் திமுக தலைமையை, இடதுசாரிக்கட்சிகளின் விவசாய சங்கங்கள் காவிரிப் பிரச்சனை தொடர்பாக சந்தித்தனரே என்று கேட்டதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோர அவர்கள் சந்தித்தனர் அது ஒரு விதி விலக்காக பார்க்கலாம் என்றார்.

இதே போல தொடர்ந்து விவசாயிகள் சங்கப் பிரச்சனைகளுக்காக அந்த சங்கங்கள் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.

தொடர்புடைய தலைப்புகள்