தலித்களுக்காகத் திறக்கப்பட்ட கோவில் மீண்டும் பூட்டப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஹரிஹரப்பாக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)தலித்துகள் வழிபடுவதற்காக திறக்கப்பட்ட கோவில், மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று (புதன்கிழமை)மீண்டும் பூட்டப்பட்டது.

Image caption திருவண்ணாமலை கோவில்

செய்யாறு வட்டத்தில் ஹரிஹரப்பாக்கம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் துலுக்காணத்தம்மன் கோவிலில் தங்களையும் உள்ளே நுழைந்து வழிபட அனுமதிக்க வேண்டும் என அருகில் உள்ள நமந்தி என்ற இடத்தில் வசிக்கும் தலித்துகள் கோரிவந்தனர். ஆனால், இதற்கு அங்கு வசிக்கும் வன்னியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தக் கோவில் கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.

இந்தக் கோவிலில் தங்களையும் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டுமென இந்த ஆண்டு ஆடி மாதத் திருவிழாவின் போது தலித்துகள் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோவில் நீண்டகாலமாக வன்னியர்களால் மட்டுமே வழிபடப்பட்டு வந்ததால், அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால், கோவில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று மூடப்பட்டது.

பிறகு, தாங்கள் சமரசமாக போக விரும்புவதாக தலித்துகள் கூறியதையடுத்து, 20 நாட்கள் கழித்து கோவில் திறக்கப்பட்டது.

Image caption மீண்டும் பூட்டப்பட்ட திருவண்ணாமலை கோவில்

தலித்துகளை உள்ளே அனுமதிப்பது குறித்து அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக ஐந்து பேரைக் கொண்ட அறங்காவலர் குழு கூறியதால், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.

ஆனால், கோவிலில் அதற்குப் பிறகு தலித்துகள் அனுமதிக்கப்படாததால், நேற்று மாலையில் இந்து அறநிலையத் துறை கோவிலில் தலித்துகளை உள்ளே அழைத்துச் சென்று வழிபட வைத்தனர்.

இதற்குப் பிறகு, 500-க்கும் மேற்பட்ட வன்னியர்கள் திரண்டுவந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இன்று காலையிலும் பிரச்சனை நீடித்ததால், பிற்பகல் 12. 30 மணியளவில் கோவில் மூடப்பட்டது.

"தலித்துகளின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் கோவிலை மூடினோம்" என்கிறார் செய்யாறு வட்டத்தின் வட்டாட்சியர் மோகன்.

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய துலுக்காணத்தம்மன் கோவில் அறக்கட்டளையின் செயலாளர்களில் ஒருவரான பாபு, "இந்தக் கோவிலுக்கென இந்து அறநிலையத் துறை இதுவரை எதையுமே செய்யவில்லை. முன்பு எப்படி வழிபாடு நடத்தப்பட்டதோ, அதேபோலத்தான் இப்போதும் வழிபாடு நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதால், அந்த வழக்கு முடிவடையும்வரை மாவட்ட நிர்வாகம் தலையிடக்கூடாது என்று அங்குள்ள ஆதிக்க ஜாதியினர் தெரிவித்தனர்.