டாடா குழுமம் பெரும் இழப்பை சந்திப்பதாக சைரஸ் மிஸ்திரி எழுதிய கடிதம் வெளியானது

டாடா குழுமம், 20 பில்லியன் டாலர் முதலீடுகளை இழக்க வேண்டிய நிலையில் இருப்பதாக அந் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி எழுதிய கடிதம், பொது அரங்கில் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மிஸ்திரி வெளியேற்றத்தை அடுத்து பல திருப்பங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா, கடந்த செவ்வாய்க்கிழமை, சைரஸ் மிஸ்திரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், அவர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. பெரும்பாலான டாடா நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், ஆனால், நிறுவன கணக்குகளில் அவற்றின் மதிப்புக்கள் உயர்த்திக் காட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் டாடா நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். எஃகு, கணினி, ரசாயனம், கார் மற்றும் விமான சேவை என பல துறைகளில் அந் நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.