தமிழக சாலைப் பணிகள்: வெள்ளையறிக்கை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

  • 28 அக்டோபர் 2016

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளின் உண்மை நிலை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளை அகலப்படுத்தும் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப் படுவதாகவும், அதில் மிக முக்கியமாக 40 சதவீதத்திற்கு மேல் ஆதி திராவிடர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களை மாவட்ட சாலைகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சாலை விபத்துக்களை தவிர்க்கவும், சாலை விபத்தால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும் சாலைக் கட்டமைப்பு மிக முக்கியமாக தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள 15,000 கோடி ரூபாய்க்கான சாலைப் பணிகள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் என கூறியுள்ளார்.

முதல்வரின் இலாகாக்களைக் கவனித்து வரும் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வமோ அல்லது அவரது அறிவுரையின் பேரில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ இது தொடர்பான வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

2015-16 மற்றும் 2016-17 ஆகிய நிதியாண்டுகளில் தமிழக அரசு அறிவித்திருந்த திட்டங்களையும் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களில் எவ்வளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்பது குறித்தோ, புதிய பணிகளுக்கான டெண்டர்கள் கோரப்பட்டு விட்டதா என்பது போன்ற தகவல்கள் வெளிப்படையாக வெளிவரவில்லை என்பதால், அதிமுக ஆட்சியில் வழக்கமாக வெளியிடப்படும் 110 அறிவிப்புகள் போலவே இந்த "ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டத் திட்டப் பணிகள்" அறிவிப்பும் அமைந்து விட்டதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்திருப்பதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் உத்தரபிரதேசம், மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இம்மாநிலங்களில் உள்ள சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்றவையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.