தீபாவளிப் பண்டிகையின் போது சென்னையில் மாசுபாடு குறைவு

இந்தியத் தலை நகர் டில்லியில் தீபாவளிக் கொண்டாட்டங்களின் போது. பட்டாசுகளின் விஷப்புகை மண்டலம் சூழ்ந்து நகர போக்குவரத்தை மந்தப்படுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ள சூழலில், சென்னையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது, காற்றில் மாசு காரணிகளின் அளவு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption தீபாவளிப் பண்டிகையின் போது சென்னையில் மாசுபாடு குறைவு

சென்னையில் ஒலி மாசுபாடும் பல இடங்களில் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை காலங்களில் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசுகளின் அளவைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதன் படி கடந்த சில ஆண்டுகளாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு, அக்டோபர் 24-ஆம் தேதியும் 29-ஆம் தேதியும் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஆகியவை சென்னையின் பல்வேறு இடங்களில் எந்த அளவுக்கு இருந்தன என்பது கண்காணிக்கப்பட்டது.

அதன்படி, 2014-ஆம் ஆண்டோடு இந்த ஆண்டு ஒப்பிடுகையில் காற்று மாசுபாட்டின் அளவு 70 முதல் நாற்பது சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்கென சென்னையில் திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை, தி. நகர் ஆகிய பகுதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த ஐந்து இடங்களிலுமே கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை தீபாவளிக்கு முன்பாகவும், தீபாவளியன்றும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே காணப்பட்டன.

ஆனால், மிதக்கும் நுண்துகள்களைப் பொறுத்தவரை, ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரோ கிராம் என்ற அளவைத் தாண்டியே எல்லா இடங்களும் மாசுபட்டிருந்தது.

இருந்தபோதும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த அளவு குறைவாகவே இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

திருவல்லிக்கேணியில் 2014-ஆம் ஆண்டில் 297 ஆக இருந்த நுண் துகள், இந்த ஆண்டு 177 ஆகக் குறைந்துள்ளது. பெசன்ட் நகரில் 110-லிருந்து 102-ஆகவும் நுங்கம்பாக்கத்தில் 180-லிருந்து 178-ஆகவும் சௌகார்பேட்டையில் 196-லிருந்து 178-ஆகவும் தி.நகரில் 180-லிருந்து 113-ஆகவும் இந்த அளவுகள் குறைந்துள்ளன.

ஒலி மாசுபாட்டைப் பொறுத்தவரை, 2014-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் திருவல்லிக்கேணியிலும் தி. நகரிலும் அதிகரித்துக் காணப்பட்டது. திருவல்லிக்கேணியில் 2014-இல் தீபாவளியன்று 83 டெசிபலாக இருந்த ஒலி அளவு இந்த ஆண்டு 88 டெசிபலாக இருந்தது. தி. நகரில் 80 டெசிபலாக இருந்தது. 81 டெசிபலாக அதிகரித்திருந்தது. மற்ற மூன்று இடங்களிலும் 2014-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் ஒலி அளவு குறைந்தே காணப்பட்டது.

பொதுவாக, தீபாவளியின் போது மழைபெய்யும் ஆண்டுகளில் மாசின் அளவு குறைவாகவே இருக்கும் என்பதால், கடந்த ஆண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையென மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்