நரிக்குறவர்களிடமிருந்து 16 பூனைகள் சென்னையில் மீட்பு

  • 31 அக்டோபர் 2016

சென்னையின் பல்லாவரம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களிடமிருந்து 16 பூனைகளை விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டுள்ளனர்.

Image caption நரிக்குறவர்களிடமிருந்து பூனைகள் மீட்கப்பட்ட பகுதி

இந்தப் பூனைகள் மருத்துவமனைகளிலிருந்து பிடித்து வரப்பட்டதாக நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.

சென்னையின் பல்லாவரம் நகரியத்தின் ஒரு பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இங்கு பூனைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றின் மாமிசம் விற்கப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து, கடந்த 29-ஆம் தேதியன்று காவல்துறையினரின் உதவியுடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் இந்தப் பகுதிக்குச் சென்று கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 பூனைகளை மீட்டனர்.

தற்போது அந்தப் பூனைகள், பீப்புள் ஃபார் அனிமல்ஸ் என்ற அமைப்பினால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

Image caption நரிக்குறவர்களிடமிருந்து 16 பூனைகள் சென்னையில் மீட்பு

முகநூலில் பலர் தங்களது வளர்ப்பு மிருகங்களைக் காணவில்லை என்று வந்த தகவலையடுத்து, இந்த சோதனையில் ஈடுபட்டதாக விலங்குகள் நல ஆர்வலரும், இந்த சோதனையில் ஈடுபட்டவருமான கார்த்திக் பிபிசியிடம் தெரிவித்தார்.

பூனையின் மாமிசம் உணவகங்களுக்கு விற்கப்படலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும் ஆனால், அதற்கான ஆதாரம் ஏதும் தங்களிடம் இல்லையென்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமாக விலங்குகளை அடைத்து வைப்பது தவறு, உண்ணத் தகுந்த மிருகங்களின் பட்டியலில் இந்தப் பூனைகள் இல்லை என்பதாலும், இவற்றைத் தாங்கள் மீட்டதாகக் கார்த்திக் தெரிவித்தார்.

ஆனால், இந்தப் பூனைகள் வளர்ப்புப் பிராணிகள் இல்லை என்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூனைகள் பெருகிவிட்டதால், அந்த மருத்துவமனையின் நிர்வாகமே தங்களை அழைத்து பூனைகளைப் பிடிக்கச் சொன்னதாகவும் நரிக்குறவர் மக்களின் அப்பகுதி பிரதிநிதியான கோபு தெரிவித்தார்.

பூனையின் மாமிசத்தை தாங்கள் உண்பது வழக்கமென்றாலும், கடைகளில் அதனை விற்பது சாத்தியமில்லையென்றும் அவர் கூறினார்.