மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டடம் இன்று இடிக்கப்படுகிறது

சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் அபாயகரமான நிலையில் உள்ள 11 மாடி கட்டடம் இன்று பிற்பகலில் இடிக்கப்படவிருக்கிறது.

மவுலிவாக்கம் கட்டடம்
படக்குறிப்பு,

61 பேரை பலிவாங்கிய மவுலிவாக்கம் கட்டடம்

சென்னையின் போருர் பகுதிக்கு அருகில் உள்ள மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 11 மாடிகளைக் கொண்ட இரண்டு குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டிவந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி இதில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் கட்டடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்தனர். இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மற்றொரு 11 மாடி கட்டடமும் ஆபத்தான நிலைமையில் இருப்பதால், அதனை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கட்டட உரிமையாளர்கள் தரப்பில் நீதிமன்றத்திற்குச் சென்றனர். உச்ச நீதிமன்றம் இது குறித்து வல்லுனர் குழு ஒன்றை அமைத்து ஆய்வுசெய்தது. ஆய்வின் முடிவில், கட்டடம் உறுதித்தன்மையில்லாமல் இருப்பது தெரியவந்ததால், அதனை இடிக்க உத்தரவிடப்பட்டது.

கட்டடத்தை வெடிகுண்டுகளை வைத்து தகர்க்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கென திருப்பூரைச் சேர்ந்த மெக்லிங்க் என்ற நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டது. செப்டம்பர் 25ஆம் தேதியன்று கட்டடத்தை இடிக்கவும் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், திடீரென கடைசி நேரத்தில் கட்டடம் இடிப்பது தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கட்டடம் இன்று இடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து இடிக்கப்படவிருக்கும் கட்டடத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, ஏற்கனவே உள்ள விரிசல்கள் உள்ளிட்ட அம்சங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

முதலில் 11வது மாடி முதல் 5வது மாடி வரையிலான பகுதிகள் இடியும்படியும் பிறகு 5வது மாடியிலிருந்து மீதமுள்ள பகுதிகள் இடியும் வகையிலும் கட்டடத்தில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இடிபாடுகள், அந்தப் பகுதியைவிட்டு வெளியேறாத வகையில் கட்டடத்தைச் சுற்றி வலைகள் அடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை இடிப்பதற்கு 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டடத்தைச் சுற்றியுள்ள 124 வீடுகள், கடைகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கட்டடம் இடியும்போது வெளியாகும் தூசியைக் கட்டுப்படுத்த தண்ணீரை வாரி இறைப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 30க்கும் மேற்பட்ட அவசரகால மருத்துவ வாகனங்களும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. தனியார், அரசு பள்ளிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.