கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளான கேரள பெண் புகாரை திரும்ப பெற்றார்

கேரளாவில் தனது கணவரின் நண்பர்களால் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண், காவல் துறையினர் கேட்ட அவமானகரமான கேள்விகளை அடுத்து தனது புகாரைத் திரும்ப பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர் மற்றும் டப்பிங் நடிகை பாக்கியலட்சுமி

காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ''யார் உனக்கு அதிகமான சுகத்தை தந்தது?,'' என்று கேட்டதாகவும், அவரைக் காவல் நிலையத்தில் தாங்க முடியாத அளவில் மனதளவில் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தை, டப்பிங் நடிகை பாக்கியலட்சுமி தனது பேஸ்புக்கில் பதிவிட்டு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

வியாழனன்று டப்பிங் நடிகை பாக்கியலட்சுமி, பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர், பெண்ணுரிமை செயற்பாட்டாளர் மாலா பார்வதி ஆகியோருடன் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் கவுன்சிலர் ஜெயந்தன், பினேஷ், ஜினேஷ் மற்றும் ஷிபு ஆகியோர் இந்த கொடிய குற்றத்தை புரிந்ததாகத் தெரிவித்தார்.

33 வயதான அந்தப் பெண் மிகவும் பயத்துடன் இருந்ததாகவும், அச்சமுற்றதாகவும், சித்ரவதை செயப்பட்ட காரணத்தால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் புகாரை பதிவு செய்ததாக தெரிவித்தார்.

இறுதியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்ற துணிவு தனக்கு வந்தது என்று தெரிவித்துள்ளார்.

வியாழனன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் முகத்தை துணியால் மூடியபடி பேசினர்.

அந்தப் பெண், தனது புகாரை திரும்பப் பெறுமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் காவல் துறையினர் அழுத்தம் கொடுத்ததாக கூறினார்.

''நான் உண்மையைக் கூறினால், அவர்கள் எனது குழந்தைகளை கொலை செய்துவிடுவதாக தெரிவித்தனர். நீதிபதி என்னிடம் இந்தச் சம்பவத்தில் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று கேட்டபோது, நான் அழுதேன். நான் அளித்த குற்றச்சாட்டுக்களை பின்வாங்கவில்லை. ஆனால், எனது புகாரை மட்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்பினேன். நான் முதல்வரிடம் இன்னும் பல உண்மைகளைக் கூறுவேன்,'' என அவர் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், தொடர் சித்ரவதையைத் தொடர்ந்து தனது புகாரைத் திரும்ப பெற்றுள்ளார். அவர் முதல்வரையும் சந்தித்துள்ளார்.