தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்களை கட்டுப்படுத்தாவிட்டால் விவாத நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக எச்சரிக்கை

  • 4 நவம்பர் 2016

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், அதே விவாதத்தில் பங்கேற்கும் மற்றவர்களைத் தரக்குறைவாக பேசுகிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் பெரும்பாலான தனியார் செய்தித் தொலைக்காட்சிகளில் இரவில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. அரசியல், சமூகம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், அதே விவாதத்தில் பங்கேற்கும் பிறரை தரக்குறைவாகப் பேசுவதாக பிறர் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத்தில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்திக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராகவனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்த விவகாரம் மேலும் கூர்மையடைந்திருக்கிறது.

இதையடுத்து, கடந்த 29ஆம் தேதியன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களின் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அதற்குப் பிறகு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது.

பாரதீய ஜனதா, ஆர்எஸ்எஸ்காரர்கள் மிரட்டல் தொனியில் பேசும்போது அந்த விவாத்தை ஒருங்கிணைப்பவர்கள் அதைக் கண்டிக்கவில்லையெனில் இந்த விவாதங்களைப் புறக்கணிக்கப் போவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கிறிஸ்துதாஸ் காந்திக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. சுப. வீரபாண்டியன், திருமாவளவன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கலி. பூங்குன்றன், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, நிகழ்ச்சியை முடித்துச் சென்ற பிறகு தனக்கு மிரட்டல் வருவதாகக் குறிப்பிட்டார்.

சில பா.ஜகவினர் தன்னை ஒருமையில் விமர்சித்ததாகக் குறிப்பிட்டார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான சிவ ஜெயராஜ்.

ஆனால், தாங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல்தான் இம்மாதிரி குற்றச்சாட்டுகளை பா.ஜ.க பிரமுகர்கள் மீது முன்வைப்பதாகச் சொல்கிறார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் ராகவன்.

கிருஸ்துதாஸ் காந்தி விவகாரத்தில், ஜனநாயக வழியிலேயே அவரைக் கண்டித்ததாகச் சொல்கிறார் ராகவன்.

தமிழக தொலைக்காட்சி விவாதங்களில், சமூக ஆர்வலர், அரசியல் பார்வையாளர், வழக்கறிஞர் என்ற பல்வேறு அடையாளங்களுடன் பாரதீய ஜனதாக் கட்சியினர் பங்கேற்பதாகவும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.