சென்னையைில் முதிய பெண்கள் கொலையான சம்பவத்தில் சந்தேக நபர்கள் கைது

சென்னையைில் கடந்த 5 நாட்களுக்குள் மூன்று முதிய பெண்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்கள்பிடிபட்டிருப்பதாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அக்டோபர் 31ஆம் தேதியன்று, சென்னை தேனாம்பேட்டையில் வசித்துவந்த சுமார் 60 வயதான சாந்தி என்பவர் கடந்த 31ஆம் தேதி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் கொலைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல நவம்பர் 2ஆம் தேதியன்று மேற்கு மாம்பலத்தில் வசித்துவந்த 58 வயது பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்.

நவம்பர் 3ஆம் தேதியன்று ஆயிரம் விளக்குப் பகுதியில் வசித்துவந்த தனலட்சுமி என்ற 48 வயதுப் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த மூன்று கொலைகளிலும் வயதான பெண்களே கொல்லப்பட்டிருப்பதால், சென்னை நகரில் தனியாக வசிக்கும் வயதானவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுந்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், இந்த மூன்று கொலைகளிலுமே சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

சாந்தி என்பவரை அவரது வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த நான்கு பேர் பணம் மற்றும் நகைக்காக கொலைசெய்திருப்பதாகவும் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் ஜார்ஜ் கூறினார்.

லட்சுமி சுதாவை அவரது ஆண் நண்பரே கொலைசெய்திருப்பதாகவும் தனலட்சுமியை அவரது வீட்டில் வாடகைக்கு இருந்தவர் கொலைசெய்திருப்பதாகவும் ஜார்ஜ் கூறினார்.

இந்த மூன்று கொலைகளிலுமே முதியவர்கள் இறந்திருந்தாலும், இருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் சென்னை நகரில் முதியவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் கணக்கெடுப்பதில் இனி காவல்துறை தீவிரமாக இருக்கப்போவதாகவும் ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

அதேபோல, வெளிமாநிலங்களில் இருந்தும் நாடுகளிலிருந்தும் வந்து சென்னையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.