மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக்குழு: இந்தியா- இலங்கை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

  • 5 நவம்பர் 2016

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PIB
Image caption முயற்சிகள் வெற்றி பெறுமா?

மீனவர் பிரச்சனை தொடர்பாக, இந்தியா - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை சனிக்கிழமையன்று புதுடெல்லியில் நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியத் தரப்பில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கைத் தரப்பில், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு சாத்தியமான நடைமுறைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப் பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு, கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்த அந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும். மீன்வளத்துறை அமைச்சர்கள் இடையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பு நடைபெறும்.

அந்தக் குழு, இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம், கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

கொழும்பில் முதல் கூட்டம்

முதலாவது, அமைச்சர்களிடையிலான கூட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயல்பாட்டு அதிகார எல்லைகளைப் பொறுத்தவரை, 1. பாட்டம் ட்ராலிங் எனப்படும் இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நடைமுறைகளை விரிவுபடுத்துதல், 2. பிடிபட்ட மீனவர்களை ஒப்படைப்பதற்கான வரையறுக்கப்பட்ட நடைமுறை விதிகளை உருவாக்குதல், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

பிடிபட்ட படகுகளை விடுவிப்பது தொடர்பாக, முதலாவது கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இரு நாட்டு கடலோரக் காவல் படைகளுக்கு இடையில் ஹாட்லைன் எனப்படும் நேரடித் தொடர்பு வசதியை ஏற்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

மீனவர்களைக் கண்டறிய உதவும் தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் மீனவர்களைக் கையாளும்போது வன்முறை ஏதும் இடம்பெறக்கூடாது என்றும், உயிரிழப்புக்கள் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு இரு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டன.

நவம்பர் 2-ம் தேதி இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, 6 மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் சந்தித்துப் பேசுவதை ஊக்குவிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரு நாடுகளிலும் உள்ள பிற நாட்டு மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அமைச்சர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்