மக்களின் சிரமங்களை குறைக்க அரசின் வழிகாட்டு முறைகள்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை குறைப்பதற்கு வழிகாட்டு நெறிகளை அரசு அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

அதன் விவரங்கள்:

1.தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 பழைய ரூபாய் நோட்டுகளை தனி நபரோ/நபர்களோ தங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கிக் கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் அலுவலகங்களில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 30 வரை பெற்றுக் கொள்ளலாம்.

2.ரூபாய் 4000-மும் அதற்குள்ளும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒருவர் வைத்திருந்தால் அவர் எந்தவொரு வங்கி கிளையிலோ அல்லது ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் அலுவலகங்களிலோ மாற்றிக் கொள்ளலாம். இதனை ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டிருக்கும் படிவத்தை நிரப்பி அடையாள அட்டையோடு வழங்க வேண்டும். இதே வசதிகள் அஞ்சலகங்களிலும் வழங்கப்படுகிறது.

3.வங்கி கிளையிலோ அல்லது ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் அலுவலகங்களிலோ ரூபாய் 4000-ஐ மாற்றிக் கொள்ளலாம் என்ற பரிமாற்ற வரையறை 15 நாட்களுக்கு பிறகு மீளாய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அறிவிப்புகள் வழங்கப்படும்.

4.இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் வங்கியில் அந்த நபர் வைத்திருக்கும் வங்கி கணக்கில் எவ்வளவு பண நோட்டுக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ள எந்த வரையறயும் இல்லை. இருப்பினும், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) படிவம் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றால் ரூபாய் 50 ஆயிரத்திற்குள்தான் வங்கிக் கணக்கில் சேமிக்கலாம்.

5.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வழங்குவோருக்கு அதே மதிப்பிலான தொகை வங்கியின் தர வழிமுறைகள்படி அவர் வைத்திருக்கும் எந்தவொரு வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும். அதற்கு அவர் சரியான அடையாள சான்று வழங்க வேண்டும்.

6.அதே மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தொகை மூன்றாவது நபருக்கான வங்கிக் கணக்கிலும் வரவு செய்யப்படலாம். அதற்கு குறிப்பிட்ட அதிகாரமளிக்கும் கடிதத்தை வங்கிக்கு வழங்குகின்ற சரியான வங்கி நடைமுறைகளை பின்பற்றி, பொருத்தமான அடையாள அட்டைகளை அவர் வழங்க வேண்டும்.

பட மூலாதாரம், AFP

7.நவம்பர் 24 ஆம் தேதி வரை வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கின்ற அதிகபட்ச தொகை ரூபாய் 10 ஆயிரமாக இருக்கும். ஒருவாரத்தில் ஒட்டு மொத்த வரையறையாக 20 ஆயிரம் எடுக்கலாம்.

8.காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பணப்பற்று அட்டைகள், செல்பேசி வாலட்கள் மற்றும் இணையவழி பணம் பரிமாற்ற பொறிமுறைகள் போன்ற ரொக்கமின்றி மேற்கொள்ளப்படும் எந்தொரு முறைக்கும் கட்டுப்பாடுகள் இல்லை.

9.நவம்பர் 18 ஆம் தேதி வரை ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு பண அட்டைக்கு அதிகபட்சமாக ரூபாய் 2 ஆயிரம் எடுக்கலாம். நவம்பர் 19 ஆம் நாளில் இருந்து இந்த தொகை ஒரு நாளைக்கு ஒரு பண அட்டைக்கு எடுக்கின்ற தொகை ரூபாய் 4000-ஆக உயர்த்தப்படும்.

10.இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 ஆம் நாளுக்குள் மாற்றி கொள்ளாவோ அல்லது அவர்களின் வங்கி கணக்கில் போடவோ முடியாத நபர்கள், அதற்கு பிறகு ரிசர்வ் வங்கி குறிப்பிடுகின்ற தேவையான ஆவணங்களோடு ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு சென்று மாற்றி கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

11.வங்கிகளையும், அரசு கருவூலங்களையும் நவம்பர் 9 ஆம் நாள் மூடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

12.நவம்பர் 9 முதல் 10 ஆம் தேதி வரை அனைத்து தானியங்கி பணம் வழங்கும் வசதிகள், பணத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வசதிகள், பண சுழற்சி பொறிகள் மற்றும் பணம் பெறுகின்ற மற்றும் வழங்குகின்ற அனைத்து இயந்திர வசதிகளும் இயங்காது.

13.வங்கி கிளைகள் மற்றும் அரசு கருவூலங்கள் நவம்பர் 10 முதல் இயங்கும்.

14.அரசு மருத்துவமனைகள் மற்றும் அந்த மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள்/ ரயில்வே பயணச் சீட்டு கவுன்டர்கள்/ அரசு துறை கவுன்டர்கள் / பொதுத் துறையால் இயக்கப்படும் பேருந்துகள், மற்றும் விமான நிலையங்களில் உள்ள விமான சேவை கவுன்டர்கள், நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகள், பால் விற்பனை செய்யப்படும் பூத்கள், இடுகாடு மற்றும் தகன மையங்கள், பொதுத் துறை, பெட்ரோல், டீசல், எரிவாயு நிரப்பும் நிலையங்கள் ஆகிய இடங்களில், அடுத்த 72 மணி நேரங்களுக்கு (4 நாட்கள்) பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது தொடரும். சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளிலும், விமான நிலையங்களில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வெளிநாட்டு பணத்தினை குறிப்பிட்ட அளவில் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர்.