செல்லாத ரூபாய் நோட்டுக்கள்: இந்திய அரசின் அதிரடி வரலாறு

  • 8 நவம்பர் 2016

இந்தியாவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்து பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அரசு இவ்வாறு அதிரடியாக செயல்படுவது இது முதல் முறை அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image caption நரேந்திர மோதி அதிரடி

ஏற்கெனவே, இரண்டு முறை இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு, ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், 1978-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு ஒரு பின்னணி உண்டு. 1970-களிந் துவக்கத்தில், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர, சில ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கலாம் என வான்சூ கமிட்டி அறிவித்தது.

ஆனால், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டதால், கறுப்புப் பணம் வைத்திருப்போர் உஷாரடைந்து, தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை மிக விரைவாக கைமாற்றிவிட்டார்கள்.

கடந்த 1978-ல், ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசு, ஜனவரி 16-ல் அவசரச் சட்டம் மூலம் ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை விலக்கிக் கொள்ளும் முடிவை அறிவித்தது.

அந்த நடைமுறை குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், அதுபற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை NARINDER NANU
Image caption இருந்தென்ன லாபம்?

1978-ஆம் ஆண்டு, ரிசர்வ் வங்கியின் தலைமை கணக்கு அதிகாரி ஆர். ஜானகி ராமன், முக்கியப் பணிக்காக மும்பையில் இருந்து டெல்லிக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டார். டெல்லி வந்து சேர்ந்ததும், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற அரசு முடிவெடுத்துள்ளதால், அதற்கான அவசரச் சட்ட வரைவை ஒரே நாளில் தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார்.

அந்த நேரத்தில், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மத்திய அலுவலகத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.

திட்டமிட்டபடி, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ஜனவரி 16-ம் தேதி காலை குடியரசுத் தலைவர் என். சஞ்சீவ ரெட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஒப்புதல் கிடைத்ததும், அரசின் முடிவு காலை 9 மணிக்கு அகில இந்திய வானொலி செய்தியில் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 17-ம் தேதி, அனைத்து வங்கிகள் மற்றும் கருவூலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஐ.ஜி. படேல், அரசின் முடிவுக்கு ஆதரவாக இல்லை. முந்தைய அரசில் இருந்த சில தலைவர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கருதினார்.

இதுபற்றி, இந்தியப் பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் தான் எழுதிய புத்தகத்தில் படேல் குறிப்பிட்டிருக்கிறார். நிதியமைச்சர் எச்.எம். படேல், அரசின் முடிவு குறித்து தன்னிடம் தெரிவித்தபோது, இதுபோன்ற நடவடிக்கைகளால் பெரிய அளவில் பலன் கிடைக்காது என்று தான் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முறையற்ற வழிகளில் சம்பாதிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கல் சம்பாதித்ததை ரொக்கமாக வைத்திருப்பது மிகவும் அரிது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்