500, 100 ரூபாய் நோட்டுகளை உள்ளாட்சி அமைப்பு கட்டணங்களை செலுத்த பயன்படுத்தலாம்

  • 10 நவம்பர் 2016

பழைய செல்லாத ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் குழுமியுள்ள மக்கள்

நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு வரை இவ்வாறு செலுத்த முடியும். அதேபோல, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றையும் இந்த நோட்டுகளின் மூலம் செலுத்த முடியும் என அரசு அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில் பெருந்தொகையான பணத்தை வங்கியில் செலுத்துபவர்களை வருமான வரித்துறை கண்காணிக்குமா என்பது குறித்து வருவாய்த் துறை செயலர் ஹஷ்முக் அதியா விளக்கமளித்துள்ளார்.

2 லட்ச ரூபாய் வரை வங்கியில் செலுத்துபவர்களை வருமான வரித் துறை கேள்வி கேட்காது எனவும் ஆனால், இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வங்கியில் செலுத்துபவர்கள் குறித்த விவரங்கள் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு அவர்களது கணக்குகள் ஆராயப்பட்டு, அது கணக்கில் வராத பணமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒருவர் கணக்கில் வராத பெருந்தொகையை வங்கியில் செலுத்தும்போது, அது வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட பணமாகக் கருதப்பட்டு, வரி பிடிக்கப்படுவதோடு அதைப் போல 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து பலரும் நகைக்கடைகளுக்குச் சென்று பெருந்தொகையான பணத்திற்கு நகைகளை வாங்கியதாக கூறப்படும் நிலையில், இம்மாதிரி நகை வாங்கியவர்களின் நிரந்தர வருமான வரி கணக்கு எண் பெறப்பட்டுள்ளதாகவும், வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் நகைகள் வாங்கப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய் துறை செயலர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்