கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்காத தமிழக அரசு- வழக்கறிஞர்கள்

தமிழ்நாட்டில் கீழ் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதாகவும் நீதிபதிகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், பல நீதிமன்றங்கள் மழை வந்தால் ஒழுகும் நிலையில்தான் இருப்பதாக கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள்.

Image caption மத்திய அரசு நீதித் துறைக்கென ஒதுக்கீடு செய்த 150 கோடி ரூபாயைக்கூட மாநில அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கீழ் நீதிமன்றங்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் போதுமான ஊழியர்களை நியமிக்கவேண்டுமென்றும் கோரி 2001, 2002ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அதேபோல, கீழ் நீதிமன்றங்களுக்குத் தேவையான மேஜை - நாற்காலிகளை வாங்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற 2012ஆம் ஆண்டு வழக்கும் இதனுடன் சேர்த்து விசாரணைக்கு வந்தது.

நிதி இல்லாததால் நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள்கூட தள்ளிவைப்பு

அப்போது தமிழக நீதித் துறைக்கு போதுமான நிதி வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிப்பதாக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு குற்றம்சாட்டியது. நிதியில்லாத காரணத்தால் நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள்கூட தள்ளிவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றங்களுக்கென 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிந்துரைகள் செய்யப்பட்டு, அதில் பாதியாவது நிறைவேற்றித் தரவேண்டுமென்று இறங்கிவந்தும்கூட, அவை நிறைவேற்றப்படவில்லையென தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

மாநில அரசின் இயலாமையின் காரணமாக, மத்திய அரசு நீதித் துறைக்கென ஒதுக்கீடு செய்த 150 கோடி ரூபாயைக்கூட திருப்பி அனுப்பிவிட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Image caption நூலகம், கழிப்பறை, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசு நிதிநெருக்கடியில் உள்ளதா என்றும் அப்படியிருந்தால் ஜனாதிபதி ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இது தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டபோது, கீழமை நீதிமன்றங்கள், நீதிபதிகள் கூறியதைவிட மிக மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் உட்கார்வதற்கான வசதிகள்கூட பல நீதிமன்றங்களில் இல்லை என்கிறார் வழக்கறிஞரான வீரமணி

அடிப்படை வசதிகள் மோசம்

நூலகம், கழிப்பறை, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால், தேவையான வழக்கின் பிரதிகளைக்கூட உரிய காலத்தில் பெற முடியவில்ல என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, எழும்பூர் போன்ற நீதிமன்றங்கள் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட கட்டங்களில் இயங்கிவருகின்றன. இவை மிகவும் சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. பல நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுவந்தாலும் அவற்றின் பணிகள் நீண்ட காலமாக நடந்துவருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்