ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் போது இடைத் தேர்தல் குறித்த ஜெயலலிதா அறிக்கை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில் தமிழக இடைத் தேர்தல்களில் அதிமுகவினர் களப்பணி ஆற்ற உற்சாகப்படுத்தும் ஒரு அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டிருப்பதை தி.மு.கவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை M.K.Stalin
Image caption மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவுக்கு வெளியிட எப்படி மனம் வந்தது என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பு உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அரிசி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் ஏழை-நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில், அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இப்படியொரு அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவுக்கு வெளியிட எப்படி மனம் வந்தது என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

வாக்குகள் மட்டும் போதும் என்று ஜெயலலிதா நினைக்கிறாரா?’

மக்களின் நலன் பற்றியோ அவர்கள் வாழும் வாழ்க்கை பற்றியோ சிந்திக்க வேண்டியதில்லை அவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்று ஜெயலலிதா நினைக்கிறாரா, அல்லது அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்படுவது தான் அ.தி.மு.கவின் வெற்றிக்கான கடைசி அஸ்திரமாக இருக்கும் என கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எல்லாவற்றையும் திரைமறைவிலிருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் கணக்குப் போட்டு இப்படியொரு அறிக்கையை வெளியிடச் செய்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்கள் படும் அவதிகளைப் பற்றி ஜெயலலிதாவுக்குக் கவலையில்லை

இது ஜெயலலிதாவே வெளியிட்ட அறிக்கை என்றால், மக்கள் படும் அவதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதைத் தான் அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், உண்மை என்ன என்பதை, ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் முழு உடல் நலன் பெற்றுத் திரும்ப வேண்டும் என விரும்புவதுடன் அப்போது முதலமைச்சரான அவரிடம் இது குறித்த விளக்கத்தை கேட்பேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

'பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன்'

பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதாவின் முழு அறிக்கையும் படிக்க 'க்ளிக்' செய்யவும்.

முன்னதாக நேற்று இரவு, அனைவரது பிரார்த்தனைகளால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருந்தார்.

மேலும், அதில் வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்