500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடையை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றம்

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பான பொது நல வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த அறிவிப்பை தடை செய்ய மறுத்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோதி, கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி , 500 மற்றும் 1,000 நோட்டுகளை தடை செய்வதாக அறிவித்தார்.

மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிய நோட்டுக்களை பெறுவதற்காக வங்கிகளுக்கு மக்கள் தினமும் வரிசையில் நிற்பதும், ஏடி எம் களில் இரவு பகலாக காத்திருப்பதும் ஒரு வாரத்தை கடந்தும் தொடர்கிறது.

இந்நிலையில்,மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொது மக்களின் அன்றாட வாழக்கையை பாதித்துள்ளதாக கூறி, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் பழைய நோட்டுகளை மாற்ற போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் பொது நல வழக்குகள் பதியப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வில், ஒரு நாளில் ரூ.4,500 மட்டும் எடுக்க முடியும் என்ற அளவை அதிகரிக்கவும், அரசு மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

பாதிப்பிலிருந்து மக்கள் மீள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 18 ம் தேதிக்குள் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்த வழக்கில் பதிலை பதிவு செய்த அரசு வழக்கறிஞர், ரிசர்வ் வங்கி மூலம், 55,000 கோடி அளவுக்கு புதிய 2,000 மற்றும் 500 மதிப்புள்ள நோட்டுகள் பண புழக்கத்தில் தற்போது உள்ளன என்றும் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.