500, 1,000 ரூபாய் நோட்டுகளின் தடை: அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் சில குரல்கள்

நவம்பர் 8-ஆம் தேதியன்று, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டு

அதன் பிறகு, நாடெங்கும் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

நாடெங்கும் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களில் பலரும் இந்த திட்டம் அமலாக்கப்பட்ட விதம், இது தொடர்பாக அரசின் தயார் நிலை குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், மக்களில் சிலர் இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அரசின் உத்தரவுக்கு ஆதரவான சில குரல்கள்

இது குறித்து மும்பையை சேர்ந்த சிலர் பிபிசி ஹிந்தி செய்தி சேவை பிரிவிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சிக்கந்தர் கூறுகையில், ''இந்திய பிரதமர் மோதி எடுத்துள்ளது மிகச் சிறந்த நடவடிக்கையாகும். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, இது தான் ஒரே வழியாகும்'' என்று கூறினார்.

Image caption ஆட்டோ ஓட்டுநர் சிக்கந்தர்

மேலும், அவர் கூறுகையில், ''இதனால் பண வீக்கம் குறையுமென்றும், பொருட்களின் விலை மலிவாக என்று நான் நம்புகிறேன். எனது தொழில் தற்போது பாதிக்கப்பட்டிருந்தாலும், மோதியின் இந்த நடவடிக்கைக்கு நான் ஆதரவளிக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

''வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதும், பலரும் ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சிரமப்படுவதும் எனக்குத் தெரியும். ஆனால் , இப்போது நாம் சற்று சிரமத்தை பொறுத்துக் கொண்டால் தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்'' என்று அவர் இந்திய பிரதமர் மோதியின் நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவைத் தந்துள்ளார்.

மோதியின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்

Image caption ரிச்சா மிஸ்ரா

மும்பையை சேர்ந்த ரிச்சா மிஸ்ரா என்ற பெண் இது குறித்து கூறுகையில், ''இந்த விஷயத்தில் மோதி சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். கறுப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்'' என்று கூறினார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ''நானும் பணத்தை பெறுவதற்காக ஏடிஎம்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்தேன். இவ்வாறு நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்களும் சிறப்பான நடவடிக்கையை ஒப்புக் கொள்வார்கள்.

இந்த நடவடிக்கையின் நோக்கம் வீண் போகாது. நமது சிறப்பான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் மோதியின் நடவடிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

''மோதி சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது நடவடிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.'' என்று கூறிய ஆயிஷா என்ற இல்லத்தரசி, ''நாம் அனைவரும் நாட்டுக்காக நமது பங்கை செய்ய வேண்டும். நாளொன்றுக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்கும் தொகை அதிகரித்துள்ளது. இது நமது பிரச்சனையை தீர்க்க உதவும் '' என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய தலைப்புகள்