தமிழகம், புதுச்சேரியில் 4 தொகுதி இடைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்புத் தொகுதியிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் தேர்தல் நடந்த மூன்று தொகுதிகளில் அரவக் குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 82.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தஞ்சாவூரில் 69.07 சதவீதமும் திருப்பரங்குன்றத்தில் 70.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிட்ட நெல்லித்தோப்புத் தொகுதியில் 85.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேல், பதவியேற்பதற்கு முன்பாகவே மரணமடைந்ததால், அந்தத் தொகுதி காலியாக இருந்தது.

புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்புத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததால் அந்தத் தொகுதியும் காலியானது.

இந்த நான்கு தொகுதிகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்காக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

தஞ்சாவூர் தொகுதியில் 14 பேரும் அரவக்குறிச்சியில் 39 வேட்பாளர்களும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 28 வேட்பாளர்களும் நெல்லித்தோப்பு தொகுதியில் 8 பேரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடைபெற்ற அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவை வெப்கேமராக்களால் கண்காணிக்கப்பட்டன.

தேர்தலின்போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.