இடைத்தேர்தல் முடிவுகள்: மூன்றாவது இடத்தை பாஜகவிடம் பறிகொடுத்த தேமுதிக

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்தை பாஜகவிடம் பறி கொடுத்து தேமுதிக மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Image caption மூன்றாவது இடத்தை பாஜகவிடம் இழந்த தேமுதிக

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக 4-வது இடத்தையே பிடித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாரதீய ஜனதாக் கட்சி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

"NOTA" எனப்படும் யாரையும் தேர்வு செய்ய விரும்பவில்லை என்ற பிரிவுக்கு கிடைத்த வாக்குகளையும் எடுத்துக் கொண்டால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஐந்தாவது இடத்தையே தேமுதிக பிடித்துள்ளது.

முன்னதாக, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. அதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சியான திமுக, இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடிப்படையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. புதுவையில் அதிமுக இரண்டாம் இடம் பெற்றது.

படத்தின் காப்புரிமை DMDK PARTY
Image caption சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில்அங்கம் வகித்த தேமுதிக

கடந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று 104 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. அத்தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அக்கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர். தேர்தலுக்கு பின்னர், அக்கட்சியின் பல முக்கிய பிரமுகர்களும் விலகி வந்த நிலையில், இந்த இடைத் தேர்தல் தோல்வியால் தேமுதிக மேலும் பின்னடைவை சந்தித்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்