500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள்

  • 23 நவம்பர் 2016

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, தங்களது தினசரி ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் தொழிலாளிகள் இதனால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை iStock
Image caption வங்கிகளுக்கு வெளியே காத்துக் கிடக்கும் மக்கள்

டெல்லியின் புறநகர் பகுதியில் இருக்கும் முக்கிய சந்தையில், சில நூறு புலம் பெயர்ந்த வேலையாட்கள் வேலை செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றனர். பிற நாட்களில் அவர்கள் தங்களது பணிகளில் பாதியை முடித்துவிடும் சமயம் இது. ஆனால், தற்போது அவர்கள் பணியில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கின்றனர்.

நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இவர்களில் பலர் தினசரி ஊதியம் பெறும் கைவினைக் கலைஞர்கள், கட்டடத் தொழிலாளிகள், மற்றும் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டவர்கள்.

"பல ஆண்டுகளாக டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். ஆனால், இதற்கு முன்பு ஏழு பேர் கொண்ட எனது குடும்பத்திற்கு இதுவரை இப்படியோரு கஷ்டகாலம் வந்தது இல்லை. எனது மூன்று பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர்; பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், எப்படியோ ஏடிஎம் கார்டை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் எனது கவலையெல்லாம் கடனை எப்படி திரும்ப செலுத்துவேன் என்பதும் பெண்ணின் திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதும்தான் " என்று உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.

Image caption தர்மேந்திர குமார், கட்டடத் தொழிலாளி

"இரண்டு வாரமாக எனது வீட்டு வாடகையை கொடுக்காததால், எனது வீட்டின் உரிமையாளர் அதனை எங்கள் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதிகமான வேலைகள் இருந்தாலும், பணத்தடைகளால் பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை. மோதியின் அரசு ஏன் இப்படி ஒரு அவசர நிலையை ஏற்படுத்தியுள்ளது?" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள பிகாரைச் சேர்ந்த 39 வயது, சுதன் பிரசாத்.

Image caption சுதன் பிரசாத், பிகார்

"500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட இந்த தடை, பணக்காரர்களுக்கு மட்டும் தான் உதவியுள்ளது, எங்களை மாதிரி பணியாளர்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது." என்று தெரிவித்தார் முகமத் இம்ரான்.

அவர் மேலும் கூறுகையில், ''மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து தினக்கூலி வேலைக்காக டெல்லிக்கு வந்தேன். நாங்கள் எங்களை பணியில் அமர்த்திக் கொள்வதற்குள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நான் ஏன் டெல்லிக்கு வந்தேன் என என் மனைவியும் இப்போது என்னைக் கேள்வி கேட்கும் சூழல் எழுந்துள்ளது." என தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் முகமத் இம்ரான்.

"இந்த ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்திற்கு பிறகு, நானும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்; மேலும் நான்கு நாட்களாக நான் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஆனால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றால் இம்மாதிரியான சூழலை சமாளித்துக் கொள்ளலாம் ; கடைசியில் இந்தியா கறுப்பு பண சிக்கலிலிருந்து விடுபடலாம்" என அரசின் அறிவிப்புக்கு ஆதரவாக பீகாரைச் சேர்ந்த தச்சு வேலை செய்யும் பிரேம் பிரகாஷ் கருத்து தெரிவித்தார்.

இதே போன்று தங்களது தினசரி ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் சென்னை தொழிலாளிகள் இதனால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளதை தெரிவிக்கின்றனர்.

ரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள்

தொடர்புடைய தலைப்புகள்