கீதா ராமகிருஷ்ணன்: குரலற்றவர்களின் குரல்

சமூகத்தின் விளிம்பு நிலையில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் கீதா ராமகிருஷ்ணன்.

Image caption தொழிலாளர்களுக்காகப் போராடுவதே கீதாவின் இலட்சியம்

யார் இந்த கீதா ராமகிருஷ்ணன்?

1974 - மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம். 17 லட்சம் பணியாளர்கள் பங்குபெற்று, இருபது நாட்களுக்கு நடந்த வேலை நிறுத்தம். தில்லிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றுகிறது.

அந்தப் போராட்டம் மட்டுமல்ல, இந்தியாவே போராட்டங்களின் மூலமாக ஓர் எழுச்சியை சந்திக்க விரும்பிக் கொண்டிருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், ஜெயப்பிரகாஷ் நராயணன் என பல தலைவர்கள் உத்வேகமூட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் தன் ஆய்வுப் படிப்பைக் கைவிட்டுவிட்டு சென்னை திரும்பினார் அந்தப் பெண். அவர் கீதா ராமகிருஷ்ணன். மருத்துவரான தாய் கமலா ராமகிருஷ்ணனுக்கு மகளின் முடிவு பெரும் அதிர்ச்சி தான். சுதந்திரப் போராட்ட வீரரான தந்தை ராமகிருஷ்ணன், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

"தில்லிப் பல்கலைக்கழக சூழல் என்னை அம்மாதிரி மாற்றியிருக்கலாம். அந்த காலகட்டத்தில் எல்லா மாணவர்களுமே அரசியல் மயமாகியிருந்தோம். பல்கலைக்கழகங்களை விட்டு வெளியில் வாருங்கள் என ஜெயப்பிரகாஷ் விடுத்த அழைப்பு மிகவும் என்னை ஈர்த்தது" என்கிறார் கீதா.

சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருந்த உழைக்கும் மக்கள் மாமன்றத்தைச் சேர்ந்த குசேலர், சுதந்திரப் போராட்ட வீரரான எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது அறிமுகம் கீதாவுக்குக் கிடைக்கிறது. இந்த அறிமுகங்கள் அவரது வாழ்க்கையையே மாற்ற ஆரம்பித்தன.

கீதாவின் ஆரம்ப கால போராட்டங்கள்

கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து பணி நிரந்தரமற்ற சூழலில் பணியாற்றும் தொழிலாளர்களின் மத்தியில் பணியாற்ற ஆரம்பிக்கிறார் கீதா. அதற்குப் பிறகு ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பேராசிரியர் என பணிகள் கிடைத்தாலும், 1979ல் இவை எல்லாவற்றையும் துறந்துவிட்டு, குடிசைப் பகுதி மக்களின் பிரச்சனைகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறார் கீதா.

"என் அம்மாவை கடைசி வரை சமாதானப்படுத்த முடியவில்லை. என் தந்தையைப் பொறுத்தவரை நான் ஒரு வேலையில் இருந்தபடி, நான் இதையெல்லாம் செய்யலாம் என்று நினைத்தார். ஆனால், என் சகோதரர்கள் எனக்கு பெரும் ஆதரவாக நின்றார்கள். இல்லையென்றால் நான் இதையெல்லாம் செய்திருக்க முடியாது" என்று நினைவுகூர்கிறார் கீதா.

"எப்போதெல்லாம் குடிசைப் பகுதி மக்களுக்கு பிரச்சனைகள் வருகிறதோ, அப்போதெல்லாம் பெண்கள் தான் போராட்டத்தில் முன்னணியில் இருப்பார்கள். இவர்களோடு சேர்ந்து ஏன் பணியாற்றக்கூடாது என நினைத்தேன்" என்று கீதா நினைவுகூர்கிறார்.

Image caption அமைப்பு சாரா தொழிலாளர்களின் நம்பிக்கையான கீதா ராமகிருஷ்ணன்

வாழ்க்கைப் பாதையை முடிவு செய்த கீதா

அதற்குப் பிறகு, இந்தியன் கவுன்சில் ஃபார் சோஷியல் சயின்ஸ் ரிசர்ச் அமைப்பிற்கான ஒரு ஆய்வுக்காக பெண் கட்டுமானத் தொழிலாளர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தபோதுதான், இனி தன் வழி இதுதான் என்று புரிந்துகொண்டார் கீதா.

அந்த சமயத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கென எந்த சலுகையும் கிடையாது. மிக மோசமான நிலையில் அவர்கள் பணியாற்றி வந்தனர். "அவர்களிடம் இயல்பாகவே ஒரு போராட்ட உணர்வு இருந்தது. அப்படி உணர்வு இருப்பவர்களை வைத்து தான் ஏதாவது செய்யமுடியும். புதிதாக தயார் செய்வது கடினம்" என்று நினைத்த கீதா, அவர்களை ஒரு இயக்கமாக்கி, போராடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதற்குப் பிறகு, சென்னையில் கட்டுமானத் தொழிலாளர்களை வைத்து அவர் நடத்திய போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. அடுத்த கட்டமாக தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தை பிற ஆர்வலர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் கீதா.

தொடர் போராட்டங்களால் பணிந்தது அரசு

இதற்குப் பிறகு, 1981-இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வீடு முற்றுகை, ராஜ்பவன் முற்றுகை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை என பல போராட்டங்கள். இதன் விளைவாக தமிழக அரசு இறங்கி வந்து, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான சட்டத்தை உருவாக்கியது.

ஆனால், சட்டத்தை செயல்படுத்த அடுத்து பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியிருந்தது. "என்னதான் போராட்டம் நடத்தினாலும் எதுவும் நடக்கவில்லை. கட்டடத் தொழிலாளர்கள் இறந்தால் பத்தாயிரம் தரும் அறிவிப்பு 1988-இல் வெளிவந்தது. அதற்குப் பிறகு ஒன்றும் நடக்கவில்லை" என்கிறார் கீதா.

அதன் பிறகு, 1992-இல் ஜெயலலிதா ஆட்சியில் நடத்திய சாலை மறியல், கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆகியவற்றுக்குப் பிறகு படிப்படியாக நலவாரியத்திற்கான பணிகள் துவக்கப்பட்டு, 1995-இல் நலவாரியம் அமைக்கப்பட்டது.

கீதாவின் போராட்டங்களுக்கு துணை நின்ற நீதிபதி கிருஷ்ணய்யர்

"தனி நபர் சாகசங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாமே தொழிலாளர்கள் அளித்த பலம்தான். அவர்களுடைய போராட்டம்தான் இதை சாதித்தது. முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த போராட்டங்களில் மிகவும் துணை நின்றார். அவரில்லா விட்டால் தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்க எங்களால் அழுத்தம் கொடுத்திருக்க முடியாது" என்கிறார் கீதா.

முதலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு என ஆரம்பித்த இவரது செயல்பாடுகள், பிறகு அமைப்பு சாராமல் பணியாற்றும் எல்லா தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாக மாறியது.

கட்டடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், ஊரை விட்டு வந்து வெளியூரில் பணியாற்றுபவர்கள், தெருவோரம் கடை வைத்திருப்பவர்கள், சூளையில் வேலை பார்ப்பவர்கள் என பலரது பிரச்சனைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் கீதா.

"உலக மயமாக்கலுக்குப் பிறகு சுரண்டல் வேறு வேறு வடிவங்களை எடுத்துவிட்டது. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இப்போது கொத்தடிமைத் தொழிலாளர்கள் வேலைபார்க்கிறார்கள். அரச கட்டமைப்பின் வழியாக இதில் போராடுவது சிரமம்தான். ஆனால், அதைச் செய்துதான் ஆக வேண்டும்" என்று கீதா தெரிவித்தார்.

1995-இல் கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, பல்வேறு தொழிலாளர்களும் தங்களுக்கான உரிமைகளையும் கோரி போராட ஆரம்பித்தனர். ஆனால், இருந்தபோதும், 2006 -07-இல் இது ஒரு கூட்டமைப்பாக உருவெடுத்தது என்று கீதா குறிப்பிட்டார்.

சுரண்டப்படும் தொழிலாளர்களுக்காகப் போராடுவதே கீதாவின் இலட்சியம்

எல்லாக் கட்சிகளிலுமே தொழிலாளர்களுக்கு என தனியான அமைப்புகள் இருந்தாலும் அமைப்புச்சாரா தொழிலாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. "அரசியல் கட்சிகளுக்கு ஏகப்பட்ட நிர்பந்தங்கள், கூட்டணி - தேர்தல் என. ஆகவே தொழிலாளர்களுடன் பணியாற்றுவது என முடிவுசெய்தேன்" என்கிறார் கீதா.

இப்போது அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, பெண்கள் போராட்டக் குழு, கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் என பல அமைப்புகளின் மூலம் தொழிலாளர்கள், பெண்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறார் கீதா.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசுக் கொள்கைகளை வகுக்கவைப்பது, உரிமைகளைப் பெற்றுத்தருவது, சுரண்டப்படும் தொழிலாளர்களுக்காகப் போராடுவது என பலமுனைகளில் இவரது செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்