ரூபாய் நோட்டு சிக்கல்: மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திடீர் நடவடிக்கையை முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

அரசின் நடவடிக்கை, திட்டமிட்ட கொள்ளை, சட்டப்பூர்வமான சூறையாடல் என்று அவர் விமர்சித்துள்ளார்.

ரூபாய் நோட்டுப் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், அதில் பிரதமர் பங்கேற்று பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், இன்று விவாதம் நடத்த அரசுத்தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதமரும் அவைக்கு வந்திருந்தார்.

அப்போது, காங்கிரஸ் தரப்பில் பேசிய மன்மோகன் சிங், அரசின் நோக்கத்தை விமர்சிக்காவிட்டாலும், அதைச் செயல்படுத்திய விதத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்த நடவடிக்கை, அரசின் மாபெரும் தோல்வி என்று கண்டனம் தெரிவித்தார்.

எந்த நாட்டிலாவது மக்கள் வங்கியில் டெபாசிட் செய்த தங்கள் பணத்தை, தங்களாலேயே எடுக்க முடியாது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அரசின் நடவடிக்கையால், நாட்டின் மொத்த உற்பத்தி இரண்டு சதம் குறையும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாளும் ரிசர்வ் வங்கி புதிய புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நல்லதல்ல. இது பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் சரியான திட்டமிடல் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய நாடாளுமன்றம்

மக்களுக்கு நிவாரணம் கிடைக்க, நடைமுறை சாத்தியமான திட்டத்தை பிரதமர் அறிவிப்பார் என்று நம்புவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் பின்வாங்குவதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி காட்டமாக பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொண்டதால், திடீரென அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் பேசிய மூவரும் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் பேசியதாகவும், விவாதத்துக்கு தயாராக வரவில்ல என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு வரை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 2-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அரசு சேவைகளுக்காக பழைய நோட்டுக்களைச் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இனி, பொதுமக்கல் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.

இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, சமீப ஆண்டுகளில், அதிகபட்சமாக 17 காசுகள் வீழ்ச்சியடைந்து, சுமார் 69 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்