காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் மூன்று இந்தியப் படையினர் பலி ?

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் நடந்து வரும் துப்பாக்கி மோதலில், ஒரு ராணுவ அதிகாரி உட்பட மூன்று இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை AP

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் ஜம்மு பகுதியில், மிக தீவிரமாக செயல்படும் இந்திய ராணுவ தளமான நக்ரோடா பகுதியில் இந்த மோதல் நடந்து வருகிறது.

ஆனால் இதுவரை ராணுவ அதிகாரிகள் இந்த இறப்புகளை உறுதிசெய்யவில்லை .

ஜம்மு பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல்

''செவ்வாய் அன்று காலை, பலத்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் பீரங்கி ரெஜிமென்ட் முகாமைத் தாக்கினர். இந்த நடவடிக்கை தொடரும் நிலையில், எங்களது படையினர் இறந்தவர்கள் குறித்து எதுவும் சொல்லமுடியாது,'' என ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் மனீஷ் மேத்தா பிபிசியிடம் கூறினார்.

பாகிஸ்தானோடு உள்ள கொந்தளிப்பான நிலையில் உள்ள எல்லை பகுதியை பாதுகாக்கும் பணியில் இந்த இந்திய ராணுவ வடக்கு கட்டளை பிரிவு செயல்படுகிறது.

மேலும் தற்போது காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் அது நடத்தி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

வேறு ஒரு சம்பவத்தில், அருகிலுள்ள சம்பா என்ற நகரத்தில் தாங்கள் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதாக இந்திய எல்லை பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

''ஊடுருவிய மூன்று நபர்களை எங்களது படையினர் கொன்றனர். எங்களது படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்,'' என எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த மோசமான தீவிரவாத தாக்குதலில் ஒரு ராணுவ முகாமில் 19 இந்திய படையினர் கொல்லப்பட்ட பிறகு, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட காஷ்மீரில் வன்முறை அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 29ம் தேதி இந்திய ராணுவம், பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில், ''துல்லிய தாக்குதல்களை'' நடத்தியதாகக் கூறியது. இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.