இந்தியாவில் ஒரு பெண், அரசியல்வாதியாக இருக்க சிறந்த இடம் எது?

இந்தியாவில் ஒரு பெண் அரசியல்வாதியாக இருக்க சிறந்த இடம் இதுதானா?

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்ததில் மோகன்லால்கன்ஜ் என்ற நாடாளுமன்ற தொகுதி தான் அதிக முறை பெண் உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த கடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்களில் இந்தத் தொகுதியில் எட்டு தேர்தல்களில் பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மோகன்லால்கன்ஞ் தொகுதிதான் இந்தியாவில் பெண்கள் அரசியல்வாதியாக இருக்கச் சிறந்த இடமா என்று கண்டறிய பிபிசி ஹிந்தி சேவையின் செய்தியாளர் திவ்யா ஆர்யா அங்கு சென்றார்.

மோகன்லால்கன்ஞ் தொகுதி பெரிய அளவில் கிராமங்களைக் கொண்டது. வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பல கிராமங்களைக் கடந்து மோகன்லால்கன்ஜுக்கு செல்ல வேண்டும்.

ஆச்சரியப்படும் வகையில், சாலைகள் நல்ல நிலையில் இருந்ததால், அந்தப் பயணம் மிக வசதியான ஒன்றாகத்தான் இருந்தது. நெடுஞ்சாலையை அடுத்து ஒரு பெரிய சாலைவழியாக பிலையா கேதா என்ற கிராமத்திற்கு சென்றோம்.

அந்தச் சாலைகளில் சிறிய செங்கல் மற்றும் மண் வீடுகள், ஆங்காங்கே காய்ந்த விளைநிலங்களைக் கடந்து வந்தோம்.

அந்தப் பகுதியில் வறுமை இருப்பதும், தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பதும், அது வர்த்தகம் நடக்கும் சுறுசுறுப்பான பகுதியோ அல்ல அது என்பதும் கண்கூடாகத் தெரிந்தது.

இறுதியாக அங்கு சில பெண்கள் குடிநீர் எடுப்பதற்காக ஒரு கைபம்ப் அருகில் இருப்பதைப் பார்த்தோம். அவர்களிடம் வழி கேட்க நின்றோம்.

அங்கு உள்ளூர் கவுன்சில் தலைவரான லட்சுமி ராவத் என்பவரின் இல்லம் எங்குள்ளது என்று கேட்டபோது, அந்தக் கூட்டத்தில் இருந்த நேஹா ராவத் என்ற ஒரு பதின்ம வயது பெண் சிரித்தார். ''பெயருக்கு தான் லட்சுமி ராவத் கவுன்சில் தலைவர். அவரது கணவரின் முதலாளி சங்கர் யாதவ் தான் உண்மையில் தலைவர்,'' என்றார் நேஹா.

''கடந்த ஆண்டு வரை சங்கர் யாதவ் தான் கிராமத் தலைவராக இருந்தார். இந்த கவுன்சில் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதால், சங்கர் யாதவ் அவரின் ஓட்டுநரின் மனைவியான லட்சுமி ராவத்தை தேர்தலில் போட்டியிட வைத்தார். லட்சுமி ராவத் வெற்றி பெற்றார்,'' என்றார் நேஹாவின் தாய்.

Image caption நேஹா ராவத் மற்றும் அவரது தாய்

கிராமப் பஞ்சாயத்து தலைமைப் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய அரசு 1992ல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. கிராம பஞ்சாயத்துத் தேர்தல்தான் அரசியல் தளத்தில் முன்னேற முதல் படி.

ஆனால், காலப்போக்கில், ஆண்கள் தங்களது மனைவிகள், உறவுக்கார பெண்கள் அல்லது தங்களிடம் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் போன்றவர்களைத் தேர்தலில் போட்டியிட வைத்து, அவர்கள் வெற்றி பெற்றதும், அவர்களை பொம்மையாக்கி, பதவிக்கு உரிய அதிகாரம், நிர்வாக பொறுப்புகள் போன்றவற்றின் மீது தங்களது கட்டுப்பாட்டைச் செலுத்திய சம்பவங்கள் அடிக்கடி வெளியாகின.

மற்ற எந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் காட்டிலும், மோகன்லால்கன்ஜ் தான் அதிக முறை பெண்களை தேர்வு செய்த சாதனை படைத்த நாடாளுமன்ற தொகுதியாக உள்ள நிலையில், நான் மோகன்லால்கன்ஜின் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணினேன்.

Image caption லட்சுமி ராவத்

கடைசியாக 2009ல் மோகன்லால்கன்ஜில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீலா சரோஜ். இவரது பதவிக் காலம் 2014ல் நிறைவு பெற்றது. கிராம பஞ்சாயத்துகளில்உண்மையான தலைமை பொறுப்பை பெண்கள் வகிப்பது பெரிய சவாலான ஒன்று தான் என சுஷீலா சரோஜ் ஒப்புக்கொள்கிறார்.

Image caption முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீலா சரோஜ்.

''தங்களது மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பின், அந்த வெற்றிக்கான பேரணியை கணவர்கள் தங்களது தலைமையில், தாங்கள் வெற்றி பெற்றது போல நடத்திச் செல்வதை நான் பார்த்துள்ளேன். அந்த நேரங்களில் அவர்களை தனியே அழைத்து, அவர்களுக்குப் பதிலாக வெற்றி பெற்ற பெண்களுக்கு மலர்மாலையை அவர்கள் கையாலே தர வைத்திருக்கிறேன்,'' என்றார் சுஷீலா சரோஜ்.

இந்தப் பகுதியில் உள்ள 1.8 மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்கள், விவசாயத்தின் மூலம் தான் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர்.

குறிப்பாகப் பெண்கள் மத்தியில், கல்வியறிவு குறைவாக உள்ளது. நேஹா ராவத் அதிர்ஷ்டசாலி. ராவத்தின் பெற்றோர் அவரைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

இங்கு மக்களின் வாழ்க்கை மிகக் கடினமானது. ராவத்தின் தாய் இங்கு வேலைகள் எதுவும் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் கிடைக்கும் வேலைகளின் மூலம் கிடைக்கும் கூலி அவர்களின் அன்றைய நாளுக்கான முழு செலவுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் குறைவானதாக இருக்கும்.

''எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள். நகரத்தில் உள்ள கல்லூரி தொலைவில் உள்ளது. மேலும் அது தனியார் கல்லுரி. எனது பெற்றோரால் அங்கு விதிக்கப்படும் கட்டணத்தையோ, அங்குச் சென்ற வர போக்குவரத்து செலவையோ செலுத்த முடியாது,'' என்று ராவத் கூறினார்.

மோகன்லால்கன்ஜில் பெண்களுக்கான அரசு கல்லூரியோ அல்லது அரசால் நடத்தப்படும் மருத்துவமனையோ இல்லை. ஆனால் இது போன்ற வசதிகள் இல்லாமல் இருப்பது நேஹா ராவதின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை.

''லட்சுமி ராவத் போல இல்லாமல், எதிர்காலத்தில் நான் இந்தக் கிராமத்தின் தலைவராக ஆக விரும்புகிறேன். நான் சங்கர் யாதவாக இருக்க விரும்புகிறேன். இங்குள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல உண்மையான அதிகாரத்துடன் இருக்க விரும்புகிறேன்,'' என்றார்.

லட்சுமி ராவதின் வீட்டிற்குச் செல்லும் வழியில், தனது இலட்சியத்தை அடைய விரும்பும் நேஹாவின் உறுதியை எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஒரு கிராமத்தின் தலைவர் பதவியை அளித்த பிறகும், அவருக்கு உண்மையில் அதிகாரம் அளிக்கப்படாமல் இருக்கும் நிலை எவ்வாறு இருக்கும்?

லட்சுமி ராவத் மிக அழகான இளம் பெண். அவர் அணிந்துள்ள ஆபரணங்கள் மற்றும் உடைகள் அவரை மற்ற பெண்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. ஆனால் நான் இதுவரை சந்தித்த கிராம தலைவர்களின் வீடுகளைப் போல அல்லாமல், அவரது வீடு ஒரு அறை கொண்ட மிக சிறிய வீடாக இருந்தது.

''இது நல்ல ஏற்பாடுதான். நான் வெறும் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தேன். கிராம நிர்வாகம் பற்றி எனக்குத் தெரியாது. சங்கர் யாதவை நான் நம்புகிறேன். அவர் சொல்லும் சொல்வதைப் பின்பற்றி அவர் சொல்வதை செய்கிறேன்,'' என்று விவரித்தார். '' ''ஆனால் சில சமயம் நான் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் எனது நேரத்தை அங்கு கழிக்கிறேன்,'' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

ராவத் தனது வரம்புகள் ஒப்புக்கொள்கிறார். ஆனால் தனது ஒரு வயது மகளின் எதிர்காலம் வித்தியாசமானதாக இருக்கும் என்று கனவு காண்கிறார்.

''எனது மகள் சீக்கிரம் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போது தான் அவளை நான் பள்ளிக்கு அனுப்ப முடியும். அதன் மூலம் அவளது வாழ்க்கையில் அவள் சாதனைகளை செய்யமுடியும்,''

அடுத்து, 2013ல் முதல் முறையாக மின்சாரம் அளிக்கப்பட்ட செபாவ் கெடா என்ற கிராமத்திற்கு நான் பயணித்தேன். இன்னும் கூட மின்சார வசதி இல்லாத சில கிராமங்கள் மோகன்லால்கன்ஜில் உள்ளன.

தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கும், செல்பேசிகளை சார்ஜ் செய்வதற்கும், கார்களில் உள்ள பேட்டரிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒரு தற்காலிக வசதி செய்யப்படுகிறது.

Image caption பிரியங்கா யாதவ் மற்றும் அவரது தாய்

சுமார் 100 வளமான குடும்பங்கள் வசிக்கும் ஒரு சிறிய பகுதி தான் செபாவ் கெரா கிராமம்.

இங்குள்ள பலரிடம் எருமைகள் உள்ளன. இன்னும் சிலர் தங்களது வீடுகளைப் புதிதாக வர்ணம் பூசியுள்ளனர்.

ஆனால் அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள ஒரு சுகாதார பணியாளர் மற்றும் அவரது உதவியாளர் தவிர இங்குள்ள எந்தப் பெண்களும் எந்த விதமான பணியிலோ, தொழில் நடத்துவதிலோ ஈடுபடவில்லை.

இந்தக் கிராமத்தில் பட்டமேற்படிப்பு பயிலும் இரண்டு பெண்களில் ஒருவர் பிரியங்கா யாதவ் .

''நான் பட்டப்படிப்பு முடித்தவுடன் எனது 'எனது பெற்றோர் மேலே படிக்க வைக்க மறுத்தனர். நகரத்திற்குத் தனியாக சென்று வருவது பாதுகாப்பு அற்றது என்று வாதிட்டனர்,'' என்றார்.

இறுதியில் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால், நான் பட்டமேற்படிப்பு படிப்பதால் எந்த பயனும் இல்லை என்று அவர்கள் எண்ணினர்,'' என்றார். ஆனால் அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

Image caption மோகன்லால்கன்ஜ் தொகுதியில் ஒரு பகுதி

அவரது தோழி சசி ஒரு ஆண்டுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்தவர். ஆனால் சசி ஒரு ஆண்டு பிரியங்கா படிப்பை முடிப்பதற்காகக் காத்திருந்தார். பின் கல்லூரிக்கு இருவரும் ஒன்றாகச் சென்று வருவதாகப் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றனர்.

நான் எண்ணியது போல் அல்லாமல், மோகன்லால்கன்ஞ் தொகுதிக்கு தொடர்ந்து பெண்கள் தேர்தெடுக்கப்படுவதால், சமூக முன்னேற்றம், மகளிர் மேம்பாடு போன்றவற்றில் ஒரு எடுத்துக்காட்டான தொகுதியாக இது மாறவில்லை.

ஆனாலும் இங்குள்ள இளம் பெண்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்கள். நான் அங்கிருந்து கிளம்பும் போது, பிரியங்கா, ''நாங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று யாருக்குத் தெரியும்,'' என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டே !