திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதை கட்டாயமாக்குவது சரியா? ஞாநி கேள்வி

படத்தின் காப்புரிமை AFP
Image caption சர்ச்சைக்குள்ளான நீதிமன்றத் தீர்ப்பு

திரையரங்குகளில் காட்சிகள் துவங்குவதற்கு முன்னதாக, தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்ற இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எந்த சட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்று அரசியல் ஆய்வாளர் ஞாநி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அவர், இதுபோன்ற உத்தரவுகளை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதை அரசாங்கம்தான் அமல்படுத்த முடியும். அத்தகைய உத்தரவுகள் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மட்டுமே உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

1960, 1970-களில் இதுபோன்ற ஓர் உத்தரவு நடைமுறையில் இருந்தாலும், அது அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. அதை அரசாங்கமே கைவிட்டுவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் ஏன் அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று புரியவில்லை என ஞாநி குறிப்பிட்டார்.

பொழுது போக்கிற்காக, திரையரங்குகளுக்கு செல்லும்போது, ஒரு பாடலுக்காக எழுந்து நிற்பதன் மூலம், மக்களிடையே தேசப்பற்று வளர்ந்துவிடும் என்று நம்பினால், மனித மனங்களை நீதிபதிகள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என அவர் கருத்துத் தெரிவித்தார்.

தேசிய கீதம், தேசப்பற்று ஆகியவற்றை எப்படி அளவிடுவது என்பது தொடர்பான குழப்பத்தில்தான் இவ்வாறு செய்யப்படுகிறது. இதை வைத்துத்தான் அளவிடுகிறோம் என்று சொன்னால், அதிகாரத்தில் இருக்கும் யாரும், வேறு யாரையும் துன்புறுத்துவதற்கு இது ஓர் அதிகாரத்தைக் கொடுத்துவிடும் என்று ஞாநி கவலை வெளியிட்டார்.

தேசப்பற்று குறைந்துவிட்டதா?

மக்களிடையே, தேசப்பற்று குறைந்துவிட்ட காரணத்தால்தான் இத்தகைய உத்தரவு வந்துள்ளது என்று கருதக்கூடாது என்று கூறிய ஞாநி, தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால்தான், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பல துன்பங்கள், இன்னல்கள் ஏற்பட்ட நிலையிலும் மக்கள் அதை சகித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

தேசிய கீதம், குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்பட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள், கல்வி நிலையங்கள் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஒலிக்கப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் தான் பிறப்பித்த உத்தரவை தானாகவே திரும்பப் பெற வேண்டும் என்றும் ஞாநி வலியுறுத்தினார்.