தனியார் வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

  • 30 நவம்பர் 2016
படத்தின் காப்புரிமை AFP
Image caption ரிசர்வ் வங்கி பாரபட்சமாக நடக்கிறதா?

இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, சில தனியார் வங்கிகளுக்கு அதிக ரொக்கம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, பொதுத் துறை வங்கிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருவதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

வங்கிகளிடம் போதுமான ரொக்கம் இல்லாத நிலையில் ரிசர்வ் வங்கி தினமும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருவதால் பொதுமக்களின் கோபத்தை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தமிழக தலைவரான தாமஸ் ஃப்ராங்கோ தெரிவித்தார்.

நாடு முழுவதும் சுமார் 74 சதவீதம் பேருக்கு சேவையளித்துவரும் பொதுத்துறை வங்கிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்காமல் சில தனியார் வங்கிகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தாமஸ் ஃப்ராங்கோ குற்றம்சாட்டினார்.

நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு ஐசிஐசிஐ வங்கிக்கு 4500 கோடி ரூபாயும் ஆக்சிஸ் வங்கிக்கு 700 கோடி ரூபாயும் எச்டிஎஃப்சி வங்கிக்கு 900 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆனால், 27 பொதுத்துறை வங்கிகளுக்கென மொத்தமாக 7800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

புதிதாக வெளியான 500 ரூபாய் நோட்டுகள் தென் மாவட்டங்களுக்கு 5 கோடி ரூபாய் அளவுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பெரும் சில்லரைத் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகவும் இதனால், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் இருந்து உடனுக்குடன் பணத்தைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாகவும் தாமஸ் ஃப்ராங்கோ கூறினார்.

ரிசர்வ் வங்கியில் போதுமான ரொக்கம் கையிருப்பில் இல்லாத நிலையில், தேவையான அளவு ரொக்கம் உள்ளதாக ஆளுனர் உர்ஜித் படேல் கூறுவது தவறு என்றும் தாமஸ் ஃப்ராங்கோ கூறினார்.

ரகசியம் காப்பதற்காகத்தான் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை முன்பே வங்கிகளுக்கு அனுப்பவில்லையெனக் கூறுவதையும் ஏற்க முடியாது என இந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

50 நாளில் பிரச்சனை தீராது

தற்போது புழக்கத்தில் உள்ள பணத்தில் எவ்வளவு வங்கிகளில் உள்ளது, எவ்வளவு மக்களிடம் உள்ளது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டுமென்றும் தாமஸ் ஃப்ராங்கோ வலியுறுத்தினார்.

மேலும் தற்போது பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ள பணம் முழுவதையும் வட்டியில்லாமல் ரிசர்வ் வங்கி தன்னிடம் ஒப்படைக்கச் சொல்வதை ஏற்க முடியாது என்றும், அப்படிச் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு வட்டியை வழங்க வேண்டியுள்ள வங்கிகள் பெரும் இழப்பைச் சந்திக்குமென்றும் அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழலில் 1604 கோடி என்ற எண்ணிக்கையில் 500 ரூபாய் தாள்களை அச்சடித்து முடிக்க அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகிவிடும் என்றும் 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என மத்திய அரசு பொய்யான தகவலைத் தெரிவிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்