நெருங்குகிறது நாடா புயல்: தமிழகம், புதுவையில் மிக கனமழை எச்சரிக்கை

  • 30 நவம்பர் 2016

தமிழகத்தை நெருங்கி வரும் நாடா புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனத்த மழை முதல் மிக கனத்த மழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை IMD
Image caption நாடா புயலின் நகர்வு குறித்த இந்திய வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் புகைப்படம்

வங்கக்கடலில் உருவான வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புதன்கிழமை மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது.

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் சுமார் 730 கிலோ மீட்டர் தொலைவிலும், திருகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கில் 450 கி.மீ. தொலைவிலும் இந்தப் புயல் நிலை கொண்டிருந்தது.

இந்தப் புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து, தமிழகத்தின் வேதாரண்யம் மற்றும் கடலூருக்கு அருகே புதுச்சேரி இடையே டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை இரவு 10.30 மணி நிலவரப்படி, நாடா புயல், மணிக்கு17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, சென்னைக்கு தென்கிழக்கே 490 கிலோ மீட்டர், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கில் 460 கிலோ மீட்டர், திருகோணமலைக்கு வடகிழக்கே 290 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

கனமழை எச்சரிக்கை

புதன்கிழமை மாலை மிதமான மழையாகத் துவங்கி, பல இடங்களில் மழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் கனமானது முதல் மிக கனமான மழை வரை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் உள்பகுதிகளில், ஆங்காங்கே, கனமானது முதல் மிக கனமான மழை வரை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2, 3-ஆம் தேதிகளில், கேரளத்தில் மிதமானது மழையும், ஒரு சில இடங்களில் கனத்த மழையும் பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்ரு வீசக்கூடும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நவம்பர் 30-ஆம் தேதி மாலை முதல், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேதம் ஏற்பட வாய்ப்பு

இந்த கனமழையால், பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கூரைகள் சேதமடையும். மரங்கள் முறிந்து விழும் வாய்ப்புள்ளதால், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புக்கள் துண்டிக்கப்படக்கூடும். மண் மற்றும் கல் சாலைகள் பெரிய அளவிலும், தரமான சாலைகள் சிறிதளவும் சேதமடைய வாய்ப்புள்ளது. நெல் பயிர்கள், வாழை, பப்பாளி உள்ளிட்ட மரங்கள் சேதமடையக்கூடும்.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்