கணக்கில் காட்டாத வருமானத்தில் தங்கம் வாங்கினாலும் சிக்கல்: பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பு

இந்தியாவில் தங்கம் மற்றும் தங்கநகை வாங்குவோர், கணக்கில் காட்டாத வருமானத்தில் அதை வாங்கியிருந்தால் மிகக்கடுமையான வரி விதிப்புக்கு ஆளாக நேரிடும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதிய கட்டுப்பாடுகள்

வருமான வரிச்சட்ட (இரண்டாவது திருத்த) மசோதா 2016, சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையின் பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில், பரம்பரை நகைகள் உள்பட அனைத்து வகையான தங்க ஆபரணங்களுக்கும் 75 சதம் வரி, சுங்க வரி மற்றும் செலுத்தும் வரி மீது 10 சதம் அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில், நிதியமைச்சகம் இது தொடர்பான ஓர் விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தற்போது பரிந்துரைக்கப்பட்ட வரி சட்டத்தின் மூலம் முறையான ஆதாாரங்கள் அல்லது வரி விலக்கு பெற்ற வருமானம் மூலம் பெறப்பட்ட நகைகள் வரிவிதிப்பிற்கு உட்படும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது, மற்றும் ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

மேலும், நகைகள் மீது புதிதாக வரிவிதிக்கும் எந்தவொரு அம்சமும் திருத்தப்பட்ட மசோதாவில் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption திருமணமான பெண் 500 கிராம் நகையும், திருமணமாகாத பெண் 250 கிராம் நகையும் வைத்துக் கொள்ளலாம்

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டத்தின் படியும் அல்லது பரிந்துரையில் உள்ள சட்ட திருத்தத்தின்படியும், முறையான நிதி ஆதாரங்கள் அல்லது விவசாய வருமானம் அல்லது நியாயமான வீட்டு சேமிப்பு மூலம் பெற்ற நகைகள் அல்லது முறையான நிதி ஆதாரங்கள் மூலம் சட்டப்பூர்வமாக, பரம்பரை ஆதாரம் மூலம் பெற்ற நகைகள் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரித்துறை சோதனைகளின் போது, திருமணமான பெண் 500 கிராம் நகையும், திருமணமாகாத பெண் 250 கிராம் நகையும் மற்றும் ஒரு குடும்பத்தில் ஓர் ஆண் 100 கிராம் வரையும் தங்கம் வைத்திருக்கும் பட்சத்தில் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யமாட்டார்கள். மேலும், சட்டத்துக்கு உ்பட்டு தங்க ஆபரணம் எவ்வளவு வைத்திருந்தாலும் அதற்குப் பாதுகாப்பு உண்டு.

வருமான வரி ஏய்ப்பு செய்வோர், கணக்கில் காட்டப்படாத தங்கள் வருமானத்தை, வருமானவரிக் கணக்குத் தாக்கலின்போது, வர்த்தக வருமானம் அல்லது பிற ஆதாரங்கள் மூலம் கிடைத்த வருவாய் என்று கூறி, அதைக் கணக்கில் காட்ட முயல்வதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து, புதிய சட்டத்திருத்தத்தில் விரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்