24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

  • 3 டிசம்பர் 2016

வடக்கு சுமத்திரா கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை YASSER AL-ZAYYAT/AFP/Getty Images

இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுக்கலாம் எனவும் வானிலை ஆய்வுமையம் கூறியிருக்கிறது.

முன்னதாக உருவான நடா புயல், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி நேற்று காரைக்காலுக்கு அருகில் கரையைக் கடந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

அந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி லட்சத்தீவுக்கு மேல் நிலைகொண்டிருப்பதால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்திற்கு அநேக இடங்களில் மழைபெய்யக்கூடும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகரில் 8 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மதுரை, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்