ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 2 லட்சம் கோடி வருமானமா? நம்ப மறுக்கும் வருமானவரித்துறை

  • 4 டிசம்பர் 2016

குறைவான வருவாய் ஆதாரம் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்த நிலையில், இது நம்ப முடியாத கணக்கு என்று கூறி வருமானவரித்துறை அதை நிராகரித்திருக்கிறது. அதேபோல், 13 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்குக் காட்டியவரின் விவரங்களையும் வருமானவரித்துறை ஏற்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

தாமாக முன்வந்து வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை 71,726 பேர் சுமார் 67 ஆயிரத்து 382 கோடி ரூபாய் வருவாயை அறிவித்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 - 2017 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் தாமாக முன்வந்து வருவாயை வெளியிடும் திட்டம் ஒன்றை அறிவித்திருந்ததாகவும், அதன்படி முறையான கணக்கில் வராத பணம் அல்லது சொத்து ஆகியவைகளை பொதுமக்கள் தாமாக அறிவித்து அந்த தொகையிலிருந்து 45% தொகையை அபராதமாக கட்ட கணக்கு வழக்குகளை முறைப்படுத்தி கொள்ளலாம் என்று கேட்டு கொண்டிருந்தது.

தற்போது அந்த திட்டமானது செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், 71,726 பேர் சுமார் 67,382 கோடி ரூபாயை வருவாயாக சமர்பித்துள்ளனர்.

இதுவரை பொதுமக்களிடமிருந்து பெற்ற விவரங்களில், அதிக மதிப்பு கொண்ட இரு ஆவணங்களை சந்தேகத்தின் பேரில் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மிகக் குறைந்த வருமானம் ஈட்டும் அவர்களுக்கு இவ்வளவு வருமானம் வந்தது எப்படி என்பதே சந்தேகம்.

2 லட்சம் கோடி வருவாய்

மும்பையின் பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அப்துல் ரசாக் முகமது சயீத் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கான வருவாய் கணக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதேபோல், அகமதாபாத்தில் வசிக்கும் மஹேஷ் குமார் சம்பக்கல் ஷா சுமார் 13,860 கோடி ரூபாய் வருவாயை சமர்பித்துள்ளார். இந்த இரு விண்ணப்பங்களும் விசாரணைக்காக கிடப்பில் வைக்கப்பட்டது. பின்னர், வருமான வரித்துறை மேற்கொண்டு நடத்திய விசாரணையை தொடந்து இரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொய்யான இந்த வருமான வரிக்கணக்குத் தாக்கலின் பின்னணி என்ன ன்பது குறித்து வருமான வரித்துறை விசாரணையைத் துவக்கியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்