ஜெயலலிதா- கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள்

ஜெயலலிதாவின் தொடக்கம் முதல் முடிவு வரை : முக்கிய காலகட்டங்கள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவின் தொடக்கம் முதல் முடிவு வரை : முக்கிய காலகட்டங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவர் கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள் இங்கே.

24பிப்ரவரி 1948 அன்றைய மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டேவில் ஜெயலலிதா பிறந்தார். தாய் வேதவல்லி - தந்தை ஜெயராமன்.
1961 ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா.
1965 ஏப்ரல் 9 வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஸ்ரீதர்.
9 ஜூலை 1965 பிற்காலத்தில் ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் தமிழக முதல்வராகவும் ஆன எம்.ஜி. ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவர் படம் வெளியானது.
1982 ஜூன் 4 எம்.ஜி.ஆர். துவங்கிய அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் கடலூர் மாநாட்டில் கட்சியில் இணைகிறார். ஒரு ரூபாய் கொடுத்து உறுப்பினர் அட்டையைப் பெறுகிறார்.
1983 அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக்கப்படுகிறார்.
1984 மார்ச் 24 அ.தி.மு.கவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறார் ஜெயலலிதா.
1988 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் விதவை மனைவியான ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது.
1989 ஜனவரி 21 சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கும் ஜெயலலிதா, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதோடு, சட்டமன்றத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவியாகிறார்.
1989 மார்ச் 25 தமிழக சட்டமன்றத்தில் பெரும் அமளி. தான் தாக்கப்பட்டதாகச் சொல்லி வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராகத்தான் அவைக்குள் நுழைவேன் என்கிறார்.
1991 ஜூலை 24 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து 225 இடங்களைக் கைப்பற்றி முதலமைச்சராக, முதல் முறையாகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
7 செப்டம்பர் 1995 தன் வளர்ப்பு மகன் என அறிவித்த சுதாகரனின் திருமணத்தை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்துகிறார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்ட இந்தத் திருமணம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஜெயலலிதா மீது கடும் விமர்சனங்களை இந்தத் திருமணம் ஏற்படுத்தியது.
1996 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைகிறார் ஜெயலலிதா. 168 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெறுகிறது அதிமுக. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.
1996 டிசம்பர் 7 கலர் டிவி ஊழலில் கைதுசெய்யப்பட்டு 30 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
3 பிப்ரவரி 2000 பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
14 மே 2001 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நான்கும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றதால் முதல்வராகப் பதவியேற்கிறார்.
21 செப்டம்பர் 2001 ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகிறார்.
4 டிசம்பர் 2001 பிளஸன்ட் ஸ்டே, டான்சி வழக்குகளில் ஜெயலலிதா விடுவிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவை 2003 நவம்பர் 4ல் உறுதி செய்கிறது.
2 மார்ச் 2002 வழக்குகளில் விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் முதலமைச்சராகிறார் ஜெயலலிதா. மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள், சந்தன மரக் கடத்தல்காரனாகக் கருதப்பட்ட வீரப்பன் கொல்லப்பட்டது, காஞ்சி மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஒரே இரவில் பணிநீக்கம் செய்யப்பட்டது ஆகிய பரபரப்பான சம்பவங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் நடந்தன.
16 மே 2011 மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
27 செப்டம்பர் 2014 பெங்களூரில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுகிறார் ஜெயலலிதா. 100 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறது சிறப்பு நீதிமன்றம். பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா.
17 அக்டோபர் 2014 ஜாமீனில் விடுதலையாகிறார் ஜெயலலிதா.
11 மே 2015 சொத்துக்குவிப்பு வழக்கில் எல்லாக் குற்றங்களிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்.
23 மே 2015 மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
23 மே 2016 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மை பெறுகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பதவியிலிருந்த ஒரு முதலமைச்சர் மீண்டும் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
22 செப்டம்பர் 2016 உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ஜெயலலிதா.
24 செப்டம்பர் 2016 காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
18 நவம்பர் 2016 அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.
04 டிசம்பர் 2016 சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
05 டிசம்பர் 2016 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்