'மக்களால் நான், மக்களுக்காக நான்'

  • 5 டிசம்பர் 2016

வெளிப்படையாக தனது மனதில் தோன்றியதை பேசும் ஜெயலலிதாவுக்கு, அவரது பேச்சு பல ஆதரவாளர்களையும், வெற்றியையும் பெற்றுத் தந்திருந்தாலும், சில சமயங்களில் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

Image caption செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!'

''எனக்கென்று எதுவுமில்லை, எனக்கென்று யாருமில்லை தமிழக மக்கள் தான் எனக்கு எல்லாமே '' அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க செய்யும் ஜெயலலிதாவின் வாசகம்.

'' நான் ஆளுநர் மாளிகைக்கு சென்ற போது, ஆளுநர் சென்னா ரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்'' - தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி மீது சட்டமன்றத்தில் ஜெயலலிதா தெரிவித்த பகீர் குற்றச்சாட்டு இது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து ஜெயலலிதா வினவும் ''செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!'' வாசகம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது.

Image caption ஜெயலலிதா

''இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பிஜேபி ஆட்சியை நான் கவிழ்த்தேன்.'' - சென்னை கடற்கரையில் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றிய ஜெயலலிதா தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தவறு தான் என்று தெரிவித்தார்.

2001ல் ஆட்சியிலிருந்த போதே "தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள்" என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏளனம் செய்து சட்டமன்றத்திலும் அதனை ஜெயலலிதா பதிவு செய்தது கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

1998-ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பை மையமாக வைத்து திமுக ஆட்சியை தங்களின் கூட்டணிக் கட்சியான மத்திய பாஜக கலைக்கவில்லை என்ற கோபத்தில் ஜெயலலிதா கூறியது "பல பிரச்சினைகளை நினைவில் வைத்திருக்கும் பாஜக தலைமை குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் நினைவிழந்து (செலக்டீவ் அம்னெஷியா) பாதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத இப்படிப்பட்ட ஒருவர் (அத்வானி). உள்துறை அமைச்சராக கிடைத்து இருக்கிறாரே என்ற வேதனைதான் ஏற்படுத்துகிறது" என்று பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.

Image caption மக்களால் நான், மக்களுக்காக நான்

1989 காலகட்டத்தில் தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களான கே. ஏ. கிருஷ்ணசாமி, அரங்கநாயகம் போன்றவரை நீக்கிய ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் ''அவர்கள் உதிர்ந்த ரோமங்கள். அவர்களால் எனக்கு எந்த பயனும் இல்லை. கவலையும் இல்லை''

ஒரு திராவிடக் கட்சிக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை தாங்குவதா என்ற விமர்சனம் எழுந்த போது, ஜெயலலிதா, "ஆமாம்! நான் பாப்பாத்தி தான்'' என்று தமிழக சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.

1991-96-ல் பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும், தனக்கும் "ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

''மக்களால் நான், மக்களுக்காக நான்'' - இது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அடிக்கடி முழங்கிய வாசகம் . இது குறித்து சில எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்த போதிலும், மக்களின் குறிப்பாக அதிமுக தொண்டர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற வாசகம் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்