தமிழகமும், டிசம்பர் மாதமும்: தொடரும் சோக நிகழ்வுகள்

மரணத்திற்கும், நாள், மாதம், கிழமை போன்றவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து பல தலைவர்கள் காலமாகியுள்ளதும், சுனாமி போன்ற சோக நிகழ்வுகள் டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருப்பது ஒரு வியப்பூட்டும் அம்சமாகும்.

Image caption தமிழகமும், டிசம்பர் மாதமும்: தொடரும் சோக நிகழ்வுகள்

டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெளியானது.

இதே போல் பல பிரபலங்களின் மரண செய்தி மற்றும் பேரழிவுகள், கடந்த டிசம்பர் மாதங்களில் வெளியாகியுள்ளது என்பதை காலத்தை பின்னோக்கினால் நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம். ஜி. ராமச்சந்திரன் 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மறைந்தார்.

Image caption டிசம்பர் மாதத்தில் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரன்

முன்னாள் தமிழக முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி 1972-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25-ஆம் நாளில் மறைந்தார்.

'பெரியார்' என்றழைக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஈ.வி. ராமசாமி, 1973-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24-ஆம் நாளில் காலமானார்.

'இசைக்குயில்' என்றழைக்கப்பட்ட பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, கடந்த 2004-ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி மறைந்தார்.

கடந்த 2004-ஆண்டில், இந்தியா உள்பட பல தெற்காசிய நாடுகளை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சுனாமி பேரலை டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தில் பெரும் பாதிப்பையும், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

2005-ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற பல மாவட்டங்களிலும் வெவ்வேறு நாள்களில் உயிரிழப்பு ஏற்பட்டது. டிசம்பர் 18-ஆம் தேதியன்று சென்னை எம்ஜிஆர் உள்ள ஒரு பள்ளியில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உதவியை பெற கூட்டத்தினரின் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

2015-ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் போன்ற பல தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் அணை நீர் திறப்பு ஆகியவற்றால் பலர் பலியானார்.

Image caption டிசம்பர் 7-ஆம் தேதி மறைந்த சோ ராமசாமி

இக்கட்டுரை பதிவு செய்யப்படும் இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், நடிகரும், நாடக ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார்.