ஜெயாவின் ஆட்சிக்காலம் பெண்களின் பொற்காலமா?
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில், அரசியல் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஜெயலலிதா பெரிய தடைக்கற்களைத் தாண்டி வந்தார். ஒரு பெண், அதிலும் தனித்து வாழும் பெண், இந்தச் சமூகம் வகுத்துள்ள குடும்பம் என்ற அமைப்பிற்குள் அல்லாமல் தனக்கென ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு அவர் பொது தளத்தில் செய்த அரசியல் பயணம் அசாத்தியமான ஒன்று தான்.
ஜெயலலிதா ஒரு பெண் என்பதாலே அவருக்குப் பல பெண்கள் வாக்களித்தனர்.
ஜெயலலிதா தன்னை ''உங்கள் அன்பு சகோதரி'' என்று தான் பிரச்சாரத்தின் போது மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். 1989ம் ஆண்டு தொடங்கி, சுமார் 30 ஆண்டு காலம் தமிழக அரசியலில் அங்கம் வகித்த அவர், நான்கு முறை முதல்வராக இருந்த காலத்தில் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கும், பெண்களுக்கு அரசியலில் அதிகாரமளித்தல் என்ற கோணத்தில் அவரின் ஆட்சி எந்த வித மாற்றத்தை ஏற்படுத்தியது என பல்வேறு பெண்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த அவரின் ஆட்சி பொற்கால ஆட்சி என்கிறார் முன்னாள் அதிமுக எம்எல்வான பதர் சையத். ''தனது அறிவு கூர்மை, கணிப்பு மற்றும் தனித்திறனால் தனக்கென இந்திய அரசியலில் தனி அடையாளத்தை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. 2001 முதல் 2006 வரை நான் வக்ப் வரியத்தின் தலைவர் பொறுப்பை வகித்தேன். பல்வேறு தரப்பில் இருந்து ஒரு பெண்ணை வக்ப் வரியத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதை மௌல்விகள் எதிர்த்தனர். எனக்கு முழு தைரியத்தை ஜெயலலிதா தான் கொடுத்தார். யாரிடம் இருந்து எதிர்ப்பு வந்தாலும் எனது வேலையை நான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்”, என்று தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், ''காவல் துறையில் 30 சதவீத இடஓதுக்கீடு கொண்டுவந்தார். இது பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று முறையிடலாம் என்ற தைரியத்தை கொடுத்தது. பல்கலை கழகங்களில் அவரது ஆட்சியில் தான் பெண்கள் பலர் தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்,'' என்று கூறினார் பதர் சையத்.
பெண்ணிய பார்வை இல்லாத ஆட்சி
அம்மா என தொண்டர்களாலும், பெரும்பாலான பொது மக்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட ஜெயலலிதா உண்மையில், தாயுள்ளத்தோடு நடந்துகொண்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறார் வழக்கறிஞர் அருள் மொழி. ''திரைப்படங்களில் காண்பது போல, தன்னால் முடியாததை நடிகர் ஒருவர் செய்தால், ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்களோ, அதுபோல தான் பல மூத்த ஆண் அரசியல் தலைவர்கள் அவரின் கால்களில் விழுந்ததைப் பல பெண்கள் ரசித்தனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சி அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை,'' என்றார்.
பல பேட்டிகளில் ஜெயலலிதா தான் விரும்பிய வாழ்க்கையைத் தான் வாழவில்லை என தெரிவித்திருக்கிறார் என்று கூறிய அருள்மொழி, ''தான் விரும்பிய வேற்று சாதி நபரை திருமணம் செய்ததற்காக அல்லது காதலித்தற்காக பல பெண்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டது பற்றியோ, காவல் நிலையங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை பற்றியோ நிர்வாக ரீதியாக எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை”, என்றார்.
''தன் உரிமை என்பது வேறு. பெண்ணுரிமையை நிலைநாட்டுவது என்பது வேறு. அவர் அதிக பட்சம் அதிகாரத்தைக் கொண்டிருந்த போதும், கட்சியில் இருந்த மற்ற பெண்களின் அரசியல் வாழ்க்கையை உயர்த்துவதற்கான அல்லது தனக்கு அடுத்து கட்சியை நடத்த ஒரு பெண்ணை அவர் வளர்க்க வில்லை. தனி மனிதர் ஒரு கட்சியை நடத்துவது, ஒரு தனி மனிதரான தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு ஆட்சியைததான் அவர் நடத்தினர். தனது ஆட்சியில் பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பதை அவர் நடைமுறைபடுத்தவில்லை என்கிறார்.
ஏழை பெண்களின் வாழ்வில் எழுச்சி
பெண்களுக்கு உள்ளாட்சி தொகுதிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயம், ''உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பது தான் அரசியலில் கால்பதிக்க பெண்கள் வைக்கும் முதல் படி. அவரது ஆட்சிக் காலத்தில் தான் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது”, என்றார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் பல பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தனர் என்கிறார் செல்வி ராமஜெயம். '' அவரின் எல்லா திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டுவரப்பட்டது. பெண்களின் கல்வி, சுகாதாரம், விளையாட்டு துறை போன்றவற்றில் அவர் அக்கறை கொண்டிருந்தார். அதனால் தான் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டு 1992ல் தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இலவச சைக்கிள் பல பெண் குழந்தைகள் படிப்பை தொடர உதவியது.சமீபத்தில் கொண்டுவரப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம் திட்டம் எனப் பல திட்டங்கள் பெண்களுக்கு உதவியாக இருந்தன,'' என திட்டங்களின் பட்டியலை அடுக்கினார்.
டெல்லியில் நிர்பயா என்ற பெண் கொடூரமான பாலியல் வன்முறைக்கு ஆளான போது ஜெயலலிதா பெண்களை பாதுகாக்க 13 அம்ச திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்கிறார் ராமஜெயம். பல மாநில முதல்வர்களுக்கும் முன்னுதாரணமாக அவர் இருந்தார் என்கிறார்.
மௌனத்தை பதிலாக தந்தவர்
கடந்த திங்களன்று இரவு இறந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் அலைஅலையாய் குவிந்த பொது மக்கள் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். அவரது நினைவிடத்தில் பல பெண்கள் தங்களது தலைமுடியை நீக்கி மொட்டை அடித்துக் கொள்ளும் காட்சிகள் ஊடகங்களில் பரவலாகப் பதிவு செய்யப்பட்டன. இது போன்ற ஏழை மற்றும் உணர்ச்சி வயப்பட்ட பெண்களை வாக்கு வங்கியதாகத் தான் ஜெயலலிதா பார்த்தார் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எஸ்.ஆனந்தி.
''தையல் இயந்திரம் கொடுப்பது, திருமண உதவி திட்டம், மகப்பேறு உதவி திட்டம் போன்றவை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டவை. இந்தத் திட்டங்களுக்கு அதிக நிதியைத் தான் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். தனக்கு முன்பு ஆட்சியை பிடித்த தலைவர்கள் பயன்படுத்திய யுக்தியோடு, சில புதுமைகளை புகுத்தி அரசியல் ரீதியாக வெற்றி பெற்றாரே தவிர பெண்களின் அரசியல் முன்னேற்றத்திற்கு அவரது முயற்சிகள் பெரிய அளவில் பயனுள்ளவையாக இல்லை.அவர் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் போன்றவை மீண்டும் மீண்டும் பெண்களை இந்தச் சமூகம் வகுத்துள்ள குடும்பம் என்ற அமைப்பிற்குள் வாழத்தான் உதவியது, '' என்கிறார் ஆனந்தி.
''பெண்ணாக இருப்பதால் பெண்களின் பிரச்னையை புரிந்துகொள்ள முடியும் என்று அவர் பிரசாரம் செய்த அவர், அவரது ஆட்சியில், காவல் துறையினர் நடத்திய வாச்சாத்தி பாலியல் சித்திரவதை சம்பவம் , வீரப்பன் தேடுதலில் பல பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானது போன்றவை நிகழ்ந்தன. இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை,'' என்றார்.
குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை, ஈவ் டீசிங் போன்ற குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று கூறி, ஒரு பெண்ணால் ஆளப்பட்ட மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு அவரின் பதில் மௌனம் தான் என்றார் ஆனந்தி.
டாஸ்மாக் கடைகள் அதிகரித்தது காரணமாக,குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறி ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய போது, அவர் எதுவும் பேசவில்லை என்றார். ''பெண்களை ஒரு பயனாளியாகத்தான் அவர் பார்த்தார். தனக்கு இணையான ஒரு பெண், அவளுக்குத் தேவையான அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான பாதையை அவர் அமைக்கவில்லை , அமைக்க விரும்பவும் இல்லை,'' என்றார் ஆனந்தி.