மாறன் சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத சஞ்சார் நிகம் லிமிட்டடின் (பிஎஸ்என்எல்) உயர்தொழில்நுட்ப தொலைத்தொடர்பு வசதிகளை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

சிபிஐயின் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு தலைமை பொது மேலாளர்கள், தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலர், ஒரு தனியார் தொலைக்காட்சியில் அப்போது பணியாற்றிய இருவர் ஆகியோர் மீது இந்தியக் குற்றவியல் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2004-2007 காலகட்டத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உயர் தொழில் நுட்ப தொலைபேசி இணைப்புகளைப் பெற்றதோடு, அவற்றை இலவசமாக அனுபவித்ததன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜூன், 2004 - டிசம்பர் 2006க்கு இடைப்பட்ட காலத்தில் தயாநிதி மாறனின் கோபாலபுரம் இல்லத்தில் 364 இணைப்புகள் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குறிப்பிட்டிருக்கிறது.

டிசம்பர் 2006 - செப்டம்பர் 2007 வரையிலான காலகட்டத்தில் போட் கிளப் சாலையில் உள்ள தயாநிதி மாறனின் வீட்டிற்கு 353 இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இது தவிர, ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பத்து மொபைல் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தயாநிதி மாறனின் இல்லத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளின் மூலம் பெருமளவில் காணொளி கோப்புகள், ஒலி கோப்புகள் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சேனலுக்காக அனுப்பப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

தயாநிதி மாறன் ஒட்டுமொத்தமாகப் பெற்ற 764 தொலைப்பேசி இணைப்புகளின் மூலம் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கும் தோராயமாக ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.