சசிகலா பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதல்வரின் தோழியான வி.கே. சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

சசிகலா

பட மூலாதாரம், ADMK

அவர் இன்று விடுத்திருக்கும் ஒரு அறிக்கையில், ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டு, அவருடைய சிந்தனையை உள்வாங்கியிருப்பவர் என பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவைப் போல கட்சியை ராணுவ அமைப்பைப் போல நடத்துவதற்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆவதுதான் ஒரே வழியென பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அதற்கு மாற்றுக் கருத்து அ.தி.மு.கவில் இல்லை என்றும் அப்படி மாற்றுக்கருத்துக் கொண்டிருப்பவர்கள் அ.தி.முகவினர் இல்லை என்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.கவை அழித்திட வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளைப் பரப்புவதாகவும் ஒரு புறம் ஜெயலலிதாவைப் பாராட்டி, இரங்கல் தெரிவித்துவிட்டு மறுபுறம் கட்சி சார்ந்த கோமாளிகளின் மூலம் வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறியிருக்கிறார்.