நாளை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் 'வர்தா' புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயலான வர்தா நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதியில், சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை IMD
Image caption இந்திய வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் புகைப்படம் (கோப்புப் படம்)

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயல் வர்தா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி சென்னைக்கு வடகிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் அது தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என்பதால், தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று மாலை துவங்கி நாளை வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

வர்தா புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், இந்த பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்