சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ’வர்தா’ புயல்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வர்தா புயல் இன்று மதியம் 2 முதல் மாலை 5 மணிக்குள்ளாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை IMD WEATHER TWITTER

சென்னைக்கு வடகிழக்கே 75.கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் காற்றும் வீசப்படும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றம் இயல்பை விட 1 மீட்டர் உயரத்தில் அதிகரித்து காணப்படும்.

புயல் காரணமாக காலைமுதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

பலமாக வீசும் காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன; குறிப்பாக எழும்பூர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

புயலின் காரணமாக அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காலை நிலவரப்படி புதுச்சேரியில் மூன்று வீடுகள் கடலுக்குள் அடித்துசெல்லப்பட்டுள்ளன.

வட தமிழக பகுதிகளில் மீனவ பகுதிகளில் கடல்நீர் உள்புகுந்துள்ளதால் அங்கிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு தேவையான உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.