'வர்தா' புயலின் மையப் பகுதி சென்னையை கடந்தது

  • 12 டிசம்பர் 2016

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயலான 'வர்தா', இன்று (திங்கள்கிழமை) மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்ததாகவும், அது மேலும் தற்போதுதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image caption வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு விழுந்த மரம்

இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கடும் புயலின் எதிரொலியாக, பொது மக்கள் யாரும் மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையை சின்னாபின்னமாக்கிய 'வர்தா' புயல் (புகைப்படத் தொகுப்பு)

இந்த புயலின் மையப்பகுதி கரையை கடந்த போது, அதன் வேகம் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று நள்ளிரவு வரை புயலின் தாக்கம் வலுவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை நெருங்கிய "வர்தா" புயல்(காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னையை நெருங்கிய ’வர்தா’ புயல்

தற்போது ( இரவு 7 மணியளவில்) தமிழகத்தின் உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் போன்ற இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

Image caption ரெயில் சேவைகள் ரத்து

இன்று காலை முதலே, சென்னை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல தொலைபேசி இணைப்புகள், மற்றும் கைபேசிகள் ஆகியவை செயலிழந்துள்ளன.

சென்னையில் பல முக்கிய சாலைகளிலும் வர்தா புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

கரையை கடக்கத் தொடங்கியது : மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

முன்னதாக, 'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்றிரவு(திங்கள்கிழமை)9 மணி வரை சென்னையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்