தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூட கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை: இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இந்த நடவடிக்கை முழுமையாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து மதுக்கடை உரிமங்களும் மார்ச் 31 ஆம் தேதிக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட மாட்டாது, புதிய உரிமங்களும் வழங்கப்பட மாட்டாது.

அத்தோடு இனி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவு தூரம் வரை கூட மதுக்கடைகள் அமைக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தொடுத்திருந்த பொது நலன் மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பட மூலாதாரம், AP

இன்றைய உத்தரவில் நெடுஞ்சாலை பகுதிகளில், மது விற்பனை தொடர்பான விளம்பரங்கள், பானர்கள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலை பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க உரிமம் வழங்கும் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று சுட்டிக்காட்டியது.

மத்திய அரசின் அறிவுரையை ஏற்காத மாநில அரசுகள், மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க ஏராளமான உரிமங்களை வழங்கியுள்ளதை குறிப்பிட்டு கண்டனமும் வெளியிட்டது.

மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக, அந்த அரசுகள் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இன்றைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்திய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகரிக்க அப்பகுதிகளில் மது விற்பனை அதிகரித்துள்ளதும் ஒரு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமர்வு தெரிவித்துள்ளது.இத்தகைய சூழலில் நெடுஞ்சாலைகளில் மது விற்பனை நடைபெறாமல் தடுக்க மாநில அரசுகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் எனவும் அந்த அமர்வு கூறியுள்ளது.

இந்த உத்தரவானது அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.