வர்தா புயல் வீழ்த்திய பறவைகளின் எதிர்காலம்

கடந்த வாரத்தில் சென்னையை 130கிமீ வேகத்தில் தாக்கிய வர்தா புயலால் பெருமளவு பாதிப்பை மனிதர்களை விட பறவைகள் சந்தித்துள்ளன என்ற கருத்து எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

வர்தா புயலால் தமிழகத்தில் 16 பேர் உயிரிழந்தனர்; 15,000க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வுக்கு ஆளாகினர்; ஆயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்தன என்று கூறி தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.1,000 கோடி தேவை என கோரிக்கை வைத்துள்ளது.

இந்த செய்திகளுக்கு பின் சென்னையில் பறவைகள் தங்களது உணவுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை பற்றி விவாதிக்கப்படவில்லை என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

புயலில், பறவைகள் இளைப்பாறுவதற்கான மரங்கள், கூடு கட்டுவதற்கான மரங்கள், பழங்கள் கொடுக்கும் மரங்கள் என மூன்று வகையான மரங்கள் சேதமாகியுள்ளன.

சலீம் அலி பறவையியல் மையத்தின் இயக்குனர் சங்கர் புயலால் மரங்களை எழுந்துள்ள சென்னையில் பொதுவாகக் காணப்படும் காக்கை, புறா,மைனா, புல் புல், கிளி போன்ற பறவையினங்கள் உணவுக்காக சண்டையிடும் நிலை ஏற்படும் என்கிறார்.

''தனது இருப்பிடங்கள் காணாமல் போனதால், சென்னையில் மீதமுள்ள பசுமையான இடங்களைத் தேடி பறவைகள் செல்லும். அங்கு ஏற்கனவே உள்ள பறவைகளோடு உணவுக்காக போட்டியிடும். மேலும் பறவைகளின் இனப்பெருக்கம் இதனால் பாதிக்கப்படும்,''என்கிறார்.

Image caption சென்னையில் புயலுக்கு பின் இறந்த வவ்வால்கள்

மரங்களின் சேதத்திற்கு முக்கிய காரணம் மண்ணுக்கு ஏற்ற மரங்களை விட அலங்கார மரங்களை வளர்த்ததுதான் என்கிறார் தாவரவியல் ஆராய்ச்சியாளர் நரசிம்மன்.

அவர் அரசு மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் மரம் நடும் விழாக்களின் போது பெரும்பாலும் வெளிநாட்டு மரங்களாகவும் குறிப்பாக அலங்கார மரங்கள் நடப்படுகின்றன என்கிறார்.

''நாட்டு வகை மரங்களின் கிளைகள் உடைந்தாலும், மரங்களின் வேர் பிடிப்பு உறுதியாக இருக்கும். அலங்கார வகை மரங்கள் இயற்கைப் பேரழிவு காலங்களில் எளிதில் சாய்ந்துவிடும்,'' என்றார்.

மரங்களின் இழப்பால் சென்னையில் மாசு அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ''சுமார் 60 சதவீத பசுமை குறைந்த காரணத்தால், இனி வரும் காலங்களில் சென்னையின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காற்று மாசை இலகுவாக சுத்திகரிக்கும் மரங்கள் நாம் இழந்துவிட்டோம். இதனால் காற்று மாசு, கரியமிலவாயு கட்டாயம் அதிகப்படியாக இருக்கும்,'' என்றார் அவர்.